3ம் திகதி புத்தர் வரமாட்டார்!



“தையிட்டியில் எதிர்வரும் 3ஆம் திகதி விசேட பூஜையோ, பெரஹராவோ, புதிய புத்தர் சிலை நிறுவுதலோ நடக்காது. விகாரை பிரச்சனைக்கு தீர்வு வரும் வரையில் விகாரை வளாகத்தினுள் எந்த விதமான புதிய கட்டுமானங்களையும் மேற்கொள்ள மாட்டேன் என உறுதியளிக்கிறேன் ஜின் தோட்டை நந்தாராம தேரர் அறிவித்துள்ளார்.

தையிட்டி திஸ்ஸ விகாரையில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அத்தகைய அறிவிப்பினை விடுத்துள்ளார்.

தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண நாகவிகாரையின் விகாராதிபதி விமலதர்ம தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் வடக்கில் உள்ள ஒரு விகாரையை ஜனவரி 3 ஆம் திகதி தாக்கி வகுப்புவாத கலவரத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளமை சர்ச்சைகளை ஏற்படித்தியிருந்த நிலையில் அத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி உட்பட அனைவருக்கும் நான் ஏற்கனவே தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்பதனால் அதனை உரித்துடைய பொதுமக்களுக்கு வழங்க வேண்டுமென ஆரியகுளம் நாகவிகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். இன்று மீண்டும் அதனை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடையே கருத்து வெளியிட்டுள்ளார்..

அதேவேளை கல்லுமலையும் வெடுக்குநாறியும் எங்கள் சொத்து. பௌத்தமயமாக்கலை நிறுத்துங்கள் எனத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால்  வவுனியாவில் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், வவுனியா உட்பட வடக்கு கிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


No comments