பிரதீபன் தரகர் வேலைக்கு வேண்டாம்!



யாழ்.மாவட்ட செயலர் தனது வாகனத்தில் இருந்த அரச அதிபர் என்ற பலகையை தூக்கி விட்டு அமைச்சர் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுடன் சென்று புத்தபிக்குவுடன் இரகசியமாக பேசுகிறார் என தையிட்டியில் காணி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தையிட்டி காணி உரிமையாளர்கள் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் தையிட்டியில் காணியை பிக்கு விட்டுத் தருவதாக சொல்கிறார்கள்.

நீங்கள் காணிகளை விட்டுக் கொடுக்கத் தேவையில்லை.நீங்கள் எங்கள் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்து உள்ளீர்கள். உங்கள் தேவையை எம்மிடம் கூறுங்கள்.

எவ்வளவு தேவை என்பதை நம்மிடமே கதைக்க முடியும். சட்டவிரோத தையிட்டி விகாரை தொடர்பாக நாங்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

விகாரை உள்ள காணிக்கான உறுதிகள் அரச அதிகாரிகளிடம் எம்மால் பல தடவைகள் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் சந்திரசேகர் காணி உறுதிகள் சரிபார்க்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

ஆளுநர், அரச அதிபர், பிரதேச செயலாளர்களிடம் காணி உறுதி வழங்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு அவை மக்களின் காணி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாவட்ட செயலர் தனது புரோக்கர் வேலையை கைவிட்டு மக்கள் காணிகளை மீட்டுத்தர செயற்படட்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


No comments