பிரான்சில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் கடந்த 23.11.2025 ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் 95 ஆம் பிரிவில் உள்ள Le Thillay என்ற இடத்தில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 நிகழ்வு காலை 10.30 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகி உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.நிகழ்வில், பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு தலைவர் திரு .ஜோசேப் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியை மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் திரு.புவிதரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
மாவீரர் குடும்ப உறவுகளால் மாவீரர் திருஉருவப்படத்துக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர்கள், பொதுமக்கள் என அனைவரும் அணிவகுத்து சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அரங்க நிகழ்வுகளாக தமிழ்ச்சோலை மாணவர்களின் எழுச்சி நடனங்கள், மாவீரர் கலைத்திறன்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளின் பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, கவிதை மற்றும் தமிழர் கலை பண்பாட்டுக் கழக பாடகர்களின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள் என்பன இடம்பெற்றன.
மதியபோசனத்தைத் தொடர்ந்து, மாவீரர் பெற்றோர், சகோதரர் மற்றும் உரித்துடையோர் மேடையில் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர்.
சிறப்புரையை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு.சீலன் அவர்கள் ஆற்றியிருந்தார்.
நிகழ்வின் நிறைவாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க அனைவரும் உணர்வுபொங்க கைகளைத் தட்டி நின்றனர்.
தமிழரின்தாகம் தமிழீழத் தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.






























Post a Comment