பிணையே இல்லாத மிகக்கொடூரமான தொல்லியல் சட்டம் மாற்றப்பட வேண்டும் - சுமந்திரன்
இலங்கையில் பிணை வழங்கப்படமுடியாத ஒரேயொரு சட்டமாக இருக்கக்கூடிய தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமான சட்டம் என்று கூறமுடியும். தொல்லியல் சட்டத்தின் ஊடாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தவறாகப் பிரயோகித்து, இன மற்றும் மதரீதியான ஆக்கிரமிப்புக்களை நிகழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே அச்சட்டம் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்கிழமை (25) பிணை வழங்கியது.
அந்த ஐவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வழக்கின் முடிவில் நீதிமன்றுக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
ஒரு வீட்டிலிருந்து அல்லது ஒரு கட்டடத்திலிருந்து அல்லது ஒரு கப்பலில் இருந்து ஏதாவதொரு பொருள் திருடப்பட்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 369 ஆவது பிரிவு கூறுகிறது. அந்தப் பிரிவின் கீழேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அத்தோடு 410, 417 என்ற பிரிவுகளும் பொலிஸாரின் அறிக்கையிலேயே காண்பிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு இந்த வழக்குடன் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதுடன் அந்தப் பிரிவுகளில் கூறப்பட்டிருக்கும் விடயம் ஒரு அரச உத்தியோகத்தர் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரு விடயத்தை செய்தாலோ அல்லது அறிவிப்புப் பலகையைப் பொருத்தினாலோ, அதனை அப்புறப்படுத்துவது குற்றம் என்பதேயாகும். எனவே இச்சம்பவத்தில் வீதியிலிருந்து பெயர்ப்பலகைகள் திருடப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறுவது பொருத்தமற்ற குற்றச்சாட்டு என நான் மன்றிலே சுட்டிக்காட்டினேன்.
இலங்கையில் தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமானதொரு சட்டம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் எமது நாட்டில் பிணை வழங்கமுடியாத ஒரேயொரு சட்டமாக இருப்பது தொல்லியல் சட்டம் மாத்திரமேயாகும். மற்றைய எல்லாச் சட்டங்களின் கீழும், குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கூட பிணை வழங்கமுடியும்.
ஆகவே இந்தச் சட்டம் மாற்றப்படவேண்டும். ஏனெனில் தொல்லியல் இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது எமது எல்லோருடைய விருப்பம். ஆனால் அந்தப் போர்வையின்கீழ் ஏராளமாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தொல்லியல் பொருட்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அதிகாரிகள் தவறாகப் பிரயோகித்து மத மற்றும் இன ரீதியான ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில், தொல்லியல் சட்டம் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்றார்.

Post a Comment