13ம் திருத்தம் - மாகாண தேர்தல்: இலங்கையிடம் இந்திய அரசு நேரடியாக வலியுறுத்த முடியாதா? பனங்காட்டான்


அரசியலமைப்பை முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று கூறும்போது அதற்குள் 13ம் திருத்தமும் அடங்கியுள்ளது என்பது இலங்கை அரசுக்கு புரியுமென்று இந்தியா சொல்வதால், அதனை அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி அரசு புரிந்து செயற்படுத்துமென்பதற்கு என்ன உத்தரவாதம்? 

அநுர குமர தலைமையிலுள்ள தேசிய சக்தி ஆட்சி ஒருவாறு ஒரு வருடத்தை முடித்துவிட்டது. அனுபவம் இல்லாதவர்களின் ஆட்சி என்ற கருத்தில் இவர்களை எல் போட் என்று நையாண்டி செய்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்து நோயாளியாக்கியது(?) இந்த ஆட்சியின் மகத்தான சாதனையாக பார்க்கப்படுகிறது. 

இந்த செயற்பாட்டினூடாக முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று பலருக்கு அச்ச ஊசி ஏற்றப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியை வீழ்த்த வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் ஏதாவதொரு அடிப்படையில் இணைய வேண்டுமென்ற குரல் கேட்கிறது. ஆனால், அது சாத்தியமாகக் காணப்படவில்லை. 

நாமல் ராஜபக்சவை எப்பாடுபட்டாவது நாட்டின் தலைவராக்கி விடவேண்டுமென்ற துடிப்பில் தந்தை மகிந்த தமது நோயையும் பொருட்படுத்தாது செயற்படுகிறார். ஆனால், அநுர அசாங்கமோ றக்பி வீரர் வாசிம் தாஜூதீன் கொலை விசாரணையை மீள எடுத்து துழாவத் தொடங்கியுள்ளது. இ;வ்விசாரணை தொடர்பாக நாமல் ராஜபக்ச பதற்றமடையத் தேவையில்லையென்று பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளதானது, அடுத்து என்ன நடைபெறப்போகிறது என்பதை சூசகமாகக் காட்டுகிறது. 

ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியும், சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவதற்கான எந்த அம்சமும் இல்லை. ரணிலின் மீதான சஜித்தின் நம்பிக்கையீனமே இதன் அடிப்படை. தமது தலைமைப் பதவியை விட்டுக்கொடுத்து இரு கட்சி இணைப்புக்கு பச்சைக்கொடி காட்ட ரணிலும் தயாரில்லை. இன்னொரு தடவை ஜனாதிபதியாகலாம் என்ற கனவுலகில் ரணில் சஞ்சரிப்பதுபோல தெரிகிறது. 

தெற்கின் அரசியல் இவ்வாறு உறுதியில்லாது நகர்ந்து கொண்டிருந்தாலும், மாகாண சபை தேர்தல் விடயத்தில் தமிழர் தரப்பினரும் அதே பாதையில் - ஆனால் வேறு வாகனத்தில் பயணிக்கின்றனர். இரு தரப்பினருக்கும் இப்போதுள்ள ஒரே கோரிக்கை மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்பது. ஆனால், அடிப்படையில் வெவ்வேறு காரணங்கள். 

மாகாண சபை தேர்தல் முடிவுக;டாக அநுர அரசின் செல்வாக்கின்மையை உலகுக்கு காட்டலாம் என்று தெற்கின் அரசியலாளர்கள் கருதுகின்றனர். தோல்விக்குப் பயந்து மாகாண சபை தேர்தல்களை நடத்த அரசு பின்னடிக்கிறது என்றும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

ஆனால், தமிழர்; தரப்பில் தேர்தலை கோருவதற்கான காரணம் அதுவல்ல. உள்ளாட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஒரு பாடம் கற்பித்ததுபோல மாகாண சபை தேர்தலிலும் கற்பிக்கலாமென்று எதிரணியினர் கருதுகின்றனர். ஆனால், முதலமைச்சர் பதவியில் கண் வைத்திருக்கும் தமிழரசின் சுமந்திரன் இத்தேர்தலூடாக மீண்டும் அரசியலில் எழுந்துவிட்டால் தமிழரசின் தலைமைப் பதவியையும் இலகுவாகக் கைப்பற்றி விடலாமென நம்புகிறார். 

வடக்கிலும் கிழக்கிலும் தமிழரசுக் கட்சிக்கு எட்டு எம்.பிக்கள் உள்ளனர். அநுர குமர அணிக்கும் இவ்விரு மாகாணங்களிலும் எட்டு எம்.பிக்கள் உள்ளனர். மாகாண அரசு தேர்தல் நடைபெற்றால் எந்த அணி வடக்கு கிழக்கில் ஆட்சி;யைக் கைப்பற்றும் என்று சொல்லக்கூடியதாக அரசியல் காலநிலை இன்றில்லை. தமிழர் தரப்பு கேட்கும் அரசியல் தீர்வா, அநுர குமர தரப்பினர் முன்வைக்கும் பொருளாதார மீட்சியா வாக்குகளை திரட்சியாக்கும் என்பதற்கு இளைய தலைமுறையினரே தீர்மானிப்பார்கள்;. எனினும், மாகாண சபை தேர்தலை இழுத்தடிக்கக்கூடாது என்பதே பொதுவாக அனைத்துத் தரப்பினரதும் கோரிக்கை. 

1987 யூலை 29ம் திகதி ஜே.ஆரும் ராஜிவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பிரசவம் 13ம் திருத்தம். 1987ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் திகதி இலங்கையின் அரசியலமைப்பில் இது இணைக்கப்பட்டது.  இதன் வழியாக உருவாக்கப்பட்டது மாகாண சபைகள் முறைமை. அடுத்துவரும் நாட்களில் இது முப்பத்தெட்டு ஆண்டுகளை பூர்த்தி செய்கிறது. இக்காலத்தில் வடமாகாண சபைக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. மிகுதிக்காலம் முழுவதும் அரசாங்கம் நியமிக்கும் ஆளுனர் ஆட்சியே. 

அத்தியாவசியமான காணி, காவற்துறை அதிகாரங்கள் இன்றுவரை மாகாண சபைகளுக்கு இல்லை. ஆனாலும் மாகாண சபை இயங்க வேண்டுமென்பதில் மக்களைவிட அரசியல்வாதிகளுக்கே அக்கறை கூட. இலங்கைத் தமிழர்களுக்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் இலங்கைத் தமிழர்களுக்காக ஒப்பமிட்ட  ராஜிவ் காந்தி இதனையிட்டு பெருமிதம் கொண்டார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக தமிழக மெரினா கடற்கரையிலும், சுதுமலை அம்மன் கோவில் முன்றலிலும் தெரிவிக்கப்பட்ட இரண்டு கருத்துகள் வரலாற்றுப் பிரசித்தமானவை. 

தமிழகத்தில் வாழ்பவர்களின் உரிமைகளிலும் பார்க்க கூடுதலான உரிமைகளை இலங்கைத் தமிழர்களுக்கு பெற்றுக்கொடுத்துவிட்டு உங்கள் முன்னால் நின்று உரையாற்றுகிறேன் என ராஜிவ் காந்தி மெரினா கடற்கரையில் உரையாற்றும்போது கூறினார். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதானது தமிழ் மக்களின் பாதுகாப்பை இந்தியாவிடம் கையளிப்பதானது என்ற சாரப்பட விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சுதுமலை கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். 

ஜே.ஆர். - ராஜிவ் ஒப்பந்தம் எவ்வகையிலும் நிறைவேற்றப்படவில்லை என்பதை ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து திலீபன் தியாக மரணமடைந்ததும், இந்தியப் படைகளை அன்றைய இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச நாட்டைவிட்டு வெளியேற்றியதும் நின்று நிரூபித்து வருகின்றன. 

அரைகுறை அதிகாரங்களுடன் உருவான மாகாண சபையால் எதுவும் நேர்த்தியாக செய்ய முடியாது போனது. வடமாகாண சபை முதலமைச்சராகவிருந்த சி.வி.விக்னேஸ்வரன் 2016 பெப்ரவரியில் இந்திய அரசிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். 13ம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா நேரடியாக தலையிட வேண்டுமென்பது இவரது கோரிக்கை. இந்தியாவே இலங்கையுடன் ஒப்பந்தம் செய்ததால் இந்தியாவுக்கு நேரடியாக தலையிடும் உரிமை இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. 

தமிழ் தேசிய கட்சிகளும், தமிழ் அரசியல் பிரமுகர்களும் இந்தியத் தரப்புடன் நடத்தும் ஒவ்வொரு சந்திப்பிலும் 13ம் திருத்தத்தையும், மாகாண சபைத் தேர்தலையும் நடைமுறைப்படுத்த இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றே கேட்டு வருகின்றனர். ஒரு தடவை தம்மை சந்தித்த தமிழ் கட்சிகளிடம், இப்போது இருக்கின்ற அதிகாரங்களை முழுமையாக பயன்படுத்துங்கள் என்று கூறிச் சென்றார் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். 

மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெறுமா? அப்படியானால் எப்போது? புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமானால் அதற்கு ஒரு வருடமாவது செல்லும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரட்நாயக்க தெரிவித்துள்ளார். இவரது கூற்றே நம்பக்கூடியது. ஆனால், இலங்கையின் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் அடுத்த ஆண்டில் (2026) மாகாண சபைத் தேர்தல்கள் இடம்பெறுமென்று ஒவ்வொரு மேடையிலும் உறுதி கூறி வருகின்றனர். ஜனாதிபதி அநுர குமர கூட அப்படித்தான் சொல்கிறார். எவரும் தேர்தல் இடம்பெறாது என்று இதுவரை தெரிவிக்கவில்லை. 

கொழும்பிலுள்ள இந்திய அரசின் தூதுவர் சந்தோ~; ஜா அண்மையில், அரசியல் தீர்வு விடயத்தில்கூட தமிழ் அரசியல் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் ஒன்றிணைந்து வரவில்லையென குறைப்பட்டுள்ளதை செய்திகள் தெரிவிக்கின்றன. தூதுவர் சொல்வதில் உண்மையுண்டு. தமிழ் கட்சிகள் தங்களுக்குள் பிளவுகளை வளர்த்து வருகின்றனவே தவிர இணைந்து செயற்படக்கூடியதாக தங்களை மாற்றவில்லை. அதற்கான சாத்தியமும் இருப்பதாகத் தெரியவில்லை. 

இதனை இந்தியா தனது அனுபவத்தால் நன்றாகவே அறிந்திருக்கிறது. இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோதுகூட ஒருமித்த நிலைப்பாட்டில் இவர்கள் இருக்கவில்லை. ஆனாலும் அன்றைய இந்தியப்  பிரதமர் இலங்கை ஜனாதிபதியோடு தாம் விரும்பியவாறு இந்த ஒப்பந்தத்தை செய்திருந்தார். 

மீண்டும் மீண்டும் தமிழர் தரப்பின் ஒற்றுமை இன்மையை சுட்டிக்காட்டி, அதையே தங்களுக்கான வாய்ப்பாக எடுத்து இந்தியா இலங்கையை வலியுறுத்தாது அதன் போக்கில் விடுவது நியாயமா? இலங்கை கேட்கும் உதவிகள் அனைத்தையும் இந்தியா தாராளமாக வழங்கி வருவதாக சொல்பவர்களால் 13ம் திருத்தத்தையும் மாகாண சபைத் தேர்தலையும் தாமதமின்றி நடத்துமாறு ஏன் வலியுறுத்த முடியாது. 

அரசியலமைப்பை முழுமையாக நிறைவேற்றுங்கள் என்று கூறும்போது அதற்குள் 13ம் திருத்தமும் அடங்கியுள்ளது என்பது இலங்கை அரசுக்கு புரியுமென்று இந்தியா சொல்வதால், அதனை அநுர குமரவின் தேசிய மக்கள் சக்தி அரசு புரிந்து ஏற்று செயற்படுத்துமென்பதற்கு என்ன உத்தரவாதம்? 

No comments