நிதியும் வரவில்லை:தீயில் தகனமான அறிக்கை!
அகழ்வுப்பணிக்கான நிதி வழங்கப்படாமையால் சித்துப்பாத்தி - செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில்;வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதன்போது, அடுத்த கட்ட அகழ்வுப்பணிக்கான பாதீடு கிடைக்கப்பெறாமை காரணமாக, வழக்கை எதிர்வரும் 13ம் திகதிக்கு நீதவான் தவணையிட்டுள்ளார்.
செம்மணி மனித புதைக்குழி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நிறைவில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அதில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே செம்மணியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று (01) நிறைவுக்கு வந்தது.
இறுதி நாளில் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் பாரிய தீப்பந்தப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் கடந்த 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
அதேவேளை, இலங்கை அரசாங்கத்தினைக் காப்பாற்றும் வகையில் ஐ.நா வினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் மூலம் தமிழர்களுக்கு எந்த நீதியும் வழங்கப்படப்போவதில்லை என தெரிவித்து அறிக்கை போராட்டக்காரர்களால் தீ வைத்துக் கொழுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment