திறந்து மறுநாளே மூடிய மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் மூன்றரை வருடங்களின் பின் நாளை மீண்டும் அங்குரார்ப்பணம்
யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு மீள் அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெறவுள்ளது.
அந்நிகழ்வில் , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் , வர்த்தக வாணிப அமைச்சர் வசந்த சமரசிங்க , வர்த்தக வாணிப பிரதி அமைச்சர் ஆர்.எம் ஜெயவர்த்தன , கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
மட்டுவில் பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சேவினால் திறந்து வைக்கப்பட்டது.
விவசாயிகள் தமது அறுவடைகளுக்குத் தகுந்த விலையை பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோர் மலிவு விலையில் மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்திய நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
திறந்து வைக்கப்பட்ட மறுநாளே பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டது. அதன் பின்னர் கடந்த மூன்றரை வருடங்களுக்கு மேலாக பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை பெற்றுக்கொண்ட வியாபாரிகள் , கடைக்கான முற்பணத்தை வழங்கியபோதும் இதுவரை வியாபார நடவடிக்கை நடைபெறவில்லை. அந்தப் பகுதியைப் பிரபல்யப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு தரவேண்டும். விவசாயிகளுக்கும் தென்பகுதி வியாபாரிகளும் இதைநோக்கி வருவதற்கு ஏதுவான ஏற்பாடுகளை மேற்கொண்டு தரவேண்டும். அதற்காக தமக்கு சில சலுகைகளை வழங்கவேண்டும் என் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர்.
இந்நிலையில் புதிய அரசாங்கம் பதவியேற்று ஒருவருட காலத்தின் பின் குறித்த பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை மீள் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
Post a Comment