54ஆயிரம் முப்படைகளை காணோம்!



இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல்துறை தப்பியோடிய முப்படையினரை கைது செய்யும் நடவடிக்கையினை முடுக்கிவிட்டுள்ளனர். இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை சேர்ந்த 54ஆயிரத்திற்கும் மேற்பட்ட முப்படையினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அவர்கள் உத்தியோகபூர்வ விடுப்பு எடுக்காமல் சேவைக்கும் வரவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலைமை தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும். கடந்த காலங்களில் பதிவான கட்டமைக்கப்பட்ட குற்றங்களில் தப்பியோடிய முப்படைகளை சேர்ந்தவர்களே துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களாகச் செயல்பட்டுள்ளனர்.

இவ்வாண்டின் அக்டோபர் மாதத்திற்குள் 54,087 பேர் இராணுவத்திலிருந்து தப்பி ஓடியுள்ளதாக பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 385 அதிகாரிகள் மற்றும் 47,265 பேரும்  இலங்கை விமானப்படையைச் சேர்ந்த 46 அதிகாரிகள் மற்றும் 3,396 பேரும் இலங்கை கடற்படையைச் சேர்ந்த 87 அதிகாரிகள் மற்றும் 3,108 பேரும் அந்தக் குழுக்களில் உள்ளடங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், 359 பேர் விடுப்பு இல்லாமல் வெளிநாட்டில் தங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சட்டப்பூர்வமாக பணிநீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு ஒழுக்காற்று நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் தப்பியோடிய அதிகாரிகளைக் கைது செய்வதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


No comments