போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்த தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை இணைப்பாளருக்கும், தந்தைக்கும் வாள் வெட்டு


பருத்தித்துறை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை பிராந்திய இணைப்பாளருக்கும் அவரது தந்தைக்கும் போதைப்பொருள் கும்பல் வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

தும்பளை பகுதியில் அவர்களது வீட்டுக்கு சென்ற வன்முறை கும்பல் , வீட்டில் இருந்த மகன் மற்றும் தந்தையர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது 

சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

தும்பளை பகுதியில் போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனை  ஆகியன அதிகரித்து உள்ளன இந்நிலையில் , போதைப்பொருள் விற்பனை தொடர்பிலான சி.சி.ரி.வி காணொளி தேசிய மக்கள் சக்தியின் பருத்தித்துறை இணைப்பாளருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 

அதனை அவர் பொலிசாரிடம் கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். 

அது தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில் , ஓரிரு நாட்களின் பின்னர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் , போதைப்பொருள் விற்பனை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளருக்கும் தொலைபேசி ஊடாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள. 

அவை தொடர்பில் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த போதிலும் , பொலிஸார் காத்திரமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை 

இந்நிலையில் குறித்த சம்பவங்கள் இடம்பெற்று சுமார் 20 நாட்களின் பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கும்பல் வீட்டினுள் இருந்த தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மற்றும் , அவரது தந்தை மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

No comments