முன்னாள் படைகள் மீண்டும் வீதியில்!



கோத்தபாயவை பெரும்பான்மையுடன் வெற்றிபெறச்செய்திருந்ததுடன் பின்னராக நாட்டைவிட்டு தப்பியோட வைத்திரந்த இலங்கை இராணுவ முன்னாள் படைவீரர் சங்கம் அனுர அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது.

முன்னாள் படையினரது உரிமைகளை பாதுகாக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ் குழுவொன்று கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் இன்று (24) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முப்படை மற்றும் காவல்துறை சேவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற படையினர் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

தாம் உயிரிழந்த பின்னர் தமது ஓய்வூதியத்தை எவ்வித குறைப்பும் இன்றி தமது தங்கியிருப்பாளர்களுக்கு வழங்குமாறு கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் பின்னர் அக்குழுவினர் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில், காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முற்பட்டதால் அங்கு பதற்றமான நிலைமையும் ஏற்பட்டிருந்தது.



No comments