வடமராட்சி கிழக்கில் தொடரும் சட்ட விரோத மணல் அகழ்வு - கடல் நீர் உட்புகும் அபாயத்தில் கிராமங்கள்


யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு , குடாரப்பு பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ள நிலையில் , அப்பகுதிக்குள் கடல் நீர் உட்புக கூடிய அபாயம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபடும் மாமுனை பகுதியை சேர்ந்த நபர்களுடன் பொலிஸார் நட்புறவுடன் காணப்படுவதால் , அவற்றை தடுக்க பொலிஸார் முன் வருவதில்லை எனவும் , தினமும் 08 டிப்பர் மண் அப்பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் அகழ்ந்து எடுக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 சட்ட விரோத மணல் அகழ்வுகளை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் , பருத்தித்துறை மற்றும் மருதங்கேணி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் தொடர்ந்து பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்ற போதிலும் , அவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமைகள் காணப்படுகிறது. 

மணல் அகழ்வு பொலிசாரின் துணையுடன் நடைபெறுவதாகவும் , மணல் அகழ்வுகள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு தகவல் கிடைப்பதால் , அவர்கள் தப்பி செல்கின்றனர் என பொதுமக்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் வடமராட்சி கிழக்கு பகுதிக்கு நேரில் சென்று , மணல் அகழ்வுகள் இடம்பெறும் பகுதிகளை பார்வையிட்டதுடன் , மணல் அகழ்வு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பிலான விபரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து இருந்தார். இந்நிலையிலும் தொடர்ந்து சட்ட விரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

அதேவேளை சட்டவிரோத மதுபான உற்பத்திகளும் வடமராட்சி கிழக்கு பகுதிகளில் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 

No comments