தமிழின அழிப்புக்கு பொறுப்புக்கூறல் இல்லை! தமிழினப் பிரச்சனைக்கு அரசியல்தீர்வு இல்லை! பனங்காட்டான்


எந்தக் கட்சி அரசாங்கம் அமைத்தாலும் தமிழின அழிப்புக்கு பொறுப்புக்கூற தயாரில்லை. இது ராணுவத்தைக் காட்டிக்கொடுத்து விடுமாம். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு இல்லை. சிங்கள பௌத்தத்தில் இதற்கு இடமில்லையாம். 

அநுரதபுரத்திலுள்ள தம்புத்தேகம என்ற விவசாய கிராமத்திலிருந்து பல்கலைக்கழகத்துக்கு அனுமதி பெற்ற முதலாவது இளைஞன், புரட்சிகர சிந்தனை வழியாக உருவான ஜே.வி.பி.யின் கவர்ச்சிமிகு பேச்சாளராக, செயற்பாட்டாளராக வளர்ந்து, அரசியல்வாதியாகி இறுதியில் நாட்டின் ஜனாதிபதியாகி ஒரு வருடமாகிவிட்டது. 

முன்னைய நாட்களில் ஒருவர் பிரதமராக அல்லது ஜனாதிபதியாகினால் பதவியேற்ற முதலாவது ஆண்டு பெரும் எடுப்பில் வழிபாடுகள், விருந்துபசாரங்கள், பத்திரிகைகளில் முழுப்பக்க வாழ்த்துப் படங்கள் என கொண்டாட்டம் மக்களின் வரிப்பணத்தில் அட்டகாசமாக இடம்பெறும். 

ஆனால், அநுர குமர திஸ்ஸநாயக்கவின் முதலாவது வருட பூர்த்தியில் அவ்வாறான கொண்டாட்டங்களுக்குப் பதிலாக, தேர்தல் கால உறுதிமொழிகள் எதனையும் அவர் செய்யவில்லை - மக்களை அவர் ஏமாற்றிவிட்டார் என்ற பாணியில் பல்வேறு கட்சிகளின் கண்டன அறிக்கைகளையே பார்க்கவும் கேட்கவும் முடிந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லையென எவரும் கூற  முடியாது. 

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளும் கண்டனத் தாக்குதல்களுமே அவரது அரசியலுக்கு ஆதாயமாக அமைந்துவிடக்கூடிய சாத்தியமுண்டு. இதற்கு உதாரணமாக 1950களின் பிற்பகுதியில் பிரதமராகவிருந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க பற்றிய ஒரு விடயத்தை அவரது வாழ்க்கை வரலாற்றின் நூலில் பார்க்கலாம். தினமும் காலையில் பத்திரிகைகளைப் படிப்பது அவரது வழக்கம். தம்மைப் பாராட்டியும், உயர்த்தியும் வரும் செய்திகளை அவர் விரும்பவில்லை. மாறாக தம்மை விமர்ச்சித்து வரும் விடயங்களே தமது வளர்ச்சிக்கு தேவையென பண்டாரநாயக்க கருதினாரென்று அந்த நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுர குமர ஜனாதிபதியானதும் தம்மை மேன்மை தங்கிய, அதிஉத்தம அடைமொழிகளுடன் அழைக்க வேண்டொமெனவும், தோழர் ஜனாதிபதி என்றால் போதும் எனவும் கூறியிருந்தார். பொதுநிகழ்வுகளில் கலந்து கொள்ளும்போதும், திறப்பு விழா நிகழ்வுகளில் திரைநீக்கம் செய்யப்படும் ஞாபகக் கற்களிலும் அவ்வாறே இடம்பெற வேண்டுமெனவும் அக்கறை காட்டி வருகிறார். இதனால் தம்மை உயர்வர்க்க மனிதராகக் காட்டிக்கொள்ளாது சாதாரணமானவர்களில் ஒருவராக நிலைநிறுத்துவதில் அக்கறையாக உள்ளார். 

அண்மையில் இவர் உரையாற்றிய பொதுக்கூட்ட காணொளி ஒன்றை பார்க்க முடிந்தது. அவரது உரை பின்வருமாறு ஆரம்பமாகியது. 'இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளில் ஒருவர் 1930களிலிருந்து அரசியலில் ஊறிவந்தவர். இன்னொரு ஜனாதிபதியின் பெற்றோர் இருவரும் பிரதமர்களாக இருந்தவர்கள். இன்னொரு ஜனாதிபதியின் தமையனார் ஜனாதிபதியாக இருந்தவர். இறுதியாக ஜனாதிபதியாக இருந்தவர் முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் மகன் முறையான இரத்த உறவினர். நான் அவ்வாறான குடும்ப பாரம்பரியம் இல்லாது வந்த ஒரு கிராமத்துப் பெடியன்" என்ற தம்மைப் பற்றிய இவரது அறிமுகம் மக்கள் மனதில் இலகுவாக மேடையேறும் தன்மை வாய்ந்தது. 

இவ்வாறெல்லாம் இங்கு குறிப்பிடுவதால், இவர் சொன்ன சொல் தவறாதவர், உறுதிமொழிகளை நிறைவேற்றறுபவர், அனைத்து மக்களையும் சரிசமமாக மதிப்பவர், சிறுபான்மை இனங்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு தருபவர் என்று நம்பகத்தன்மையை கொள்ள முடியாது. ஒரு வருடத்துக்குள் அவ்வாறான ஒரு முடிவுக்கு வரக்கூடாதென்பதற்கு கடந்த கால ஆட்சித் தலைமைகளிடம் கற்றுக் கொண்ட பாடங்கள் நிரம்பவே உள்ளன. 

தேர்தலுக்குப் பின்னரான ஆட்சிக் காலம் ஐந்து வருடங்கள் மட்டுமே. இதில் முதல் ஆறு மாதங்கள் முன்னைய ஆட்சிக்காலத்தில் முக்கிய பதவி வகித்தவர்களை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவது அல்லது இடமாற்றம் செய்வது. அடுத்த ஆறு மாதங்கள் தங்கள் ஆதரவாளர்கள், நம்பிக்கையானவர்களால் அந்த இடங்களை நிரப்புவது. இதனை அரசியல் பழிவாங்கல், பந்தங்களை உள்ளெடுப்பது என்றும் அரசியல் அகராதியில் கூறுவர். இரண்டாவது வருடமே உருப்படியாகதாவதை செய்வதற்கான காலம். அதுவும் முடிந்தால் மூன்றாவது வருடம் அடுத்த தேர்தலை நோக்கி காய்களை நகர்த்தும் காலம். இதுவே தேர்தல்வரை தொடரும். 

அநுர குமரவின் இரண்டாவதாண்டு பணிக்காலம் ஆரம்பமாகியுள்ளது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்ற அதிகாரம் அவருக்குள்ளது. திரிகரண சுத்தியுடன் சில பிரச்சனைகளைத் தீர்;க்க வேண்டுமென அவர் விரும்புவாரானால் அதற்கான காலம் இதுதான். ஆனால் இந்தச் சிந்தனையும் விருப்பமும் அவருக்கும் அவரது சக தோழர்களுக்கும் இருக்கிறதா என்பதுவே இப்போதுள்ள கேள்வி.

நேற்றைய (செப்டம்பர் 27) ஈழநாடு பத்திரிகையின் முதலாம் பக்க தலைப்புச் செய்தி இதற்கான பதிலாக அமைந்துள்ளது. 'எந்தவோர் அழுத்தத்துக்கும் அடிபணியத் தயாராக இல்லை - அமெரிக்காவில் கூறினார் ஜனாதிபதி அநுர" என்பது இச்செய்தியின் தலைப்பு. 'நாட்டு மக்களின் அபிலாசைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மட்டுமே தாம் கட்டுப்பட்டிருப்பதாகவும் ஒரு வருடத்துக்கு முன்னர் இந்த அரசை தெரிவு செய்த மக்கள் வைத்துள்ள அபிலாசைகளை நிறைவேற்றுவதில் எந்தவோர் அழுத்தத்துக்கும் அடிபணியத் தயாராகவில்லை" என்று ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க தெரிவித்ததாக இச்செய்தியின் முதலாவது பந்தி கூறுகிறது. 

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி ஒருவரின் நினைவும் செயலும் இவ்வாறு இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அமெரிக்காவிலுள்ள இலங்கையர் மத்தியில் இவர் இதனைக் கூறியதன் அர்த்தம் என்னவென்பது புரியாதுள்ளது. 

பொருளாதார மீட்சி, ஊழல் ஒழிப்பு, புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பவை தேர்தல் காலங்களில் இவரால் உறுதியளிக்கப்பட்டவைகளில் முக்கியமானவை. இவைகளை நிறைவேற்றுவதற்கு எவரும் தடையாக இருப்பதாகச் சொல்ல முடியாது. ஜனாதிபதியாகிய பின்னர் கடந்த ஒரு வருடத்துள் இந்தியா, சீனா, மாலைதீவு, ஐக்கிய அரபு இராஜ்ஜியம், ஜேர்மனி, வியட்நாம், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இப்பயணங்களின் இலக்கு பொருளாதார மீட்புக்கான உதவி பெறுவது. இதில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்து உதவியளித்து வருகிறது. அமெரிக்கா புதிய வரிவிதிப்பில் சலுகை காட்டியுள்ளது. 

உள்நாட்டு ஊழல் ஒழிப்புக்கு உலகின் எந்த நாடும் எதிர்ப்புக் காட்டவில்லை. இதனை உள்நாட்டு விவகாரமாகவே அவை பார்க்கின்றன. தேர்தல் காலங்களில் சொன்னது செயற்படுத்தப்படுகின்றது என்று இதனை அந்நாடுகள் எடுத்துக்கொண்டுள்ளன. 

இதுவரை திரும்பிப் பார்க்காத ஒரு பக்கம் உண்டென்றால் இனப்பிரச்சனைக்கான தீர்வு மட்டுமே. இதனை தமிழர் பிரச்சனை என்று நேரடியாகவே கூறலாம். ஒரு வருடத்துக்குள்ளேயே இவ்விடயத்தை அநுர மறந்துவிட்டது போலவே தெரிகிறது. இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஆதரவு என்று அதன் செயலாளர் நாயகம் அன்ரனியோ குட்டறஸ் ஜனாதிபதி அநுரவிடம் நேரடியாகத் தெரிவித்ததாக செய்திகள் கூறுகின்றன. பொறுப்புக்கூறலுக்கு சர்வதேச நீதிவிசாரணை பொறிமுறையை ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையகம் கடந்த மாதமும் கூறியபோது அது அநுர அரசால் நிராகரிக்கப்பட்டது.

அண்மைக் காலங்களில் அரச செயற்பாடுகள் பற்றிக் கூறும்பொழுது இனப்பிரச்சனை தீர்வு என்பது மறக்கப்பட்ட ஒன்றாக தள்ளப்படுகிறது. பொருளாதார மீட்பு என்பதே அரசின் முக்கிய செயற்பாடாக காட்டப்படுகிறது. எப்போதாவது இனப்பிரச்சனை பற்றி பேசும்போது புதிய அரசியலமைப்பினூடாக இப்பிரச்சனைக்கு அனைவரும் ஏற்கும் வகையில் தீர்வு காணப்படுமென சொல்லப்படுகிறது. 

இலங்கை - இந்திய ராஜிவ் - ஜே.ஆர். ஒப்பந்தத்தை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்த ஜே.வி.பி. 13ம் திருத்தம், மாகாண சபை என்பவற்றை நடைமுறைப்படுத்துமென நம்பமுடியாது. ஆனால், மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமென்றே மீண்டும் மீண்டும் கூறப்படுகிறது. சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட பின்னர் ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்த கருத்தொன்று அதிமுக்கியமானது. பதினைந்து அல்லது இருபது ஆண்டுகள் தொடர்ச்;சியாக ஆட்சி புரிந்தால் மட்டுமே நாட்டை பல துறைகளிலும் அபிவிருத்தி செய்ய முடியுமென்பது இவர் வெளியிட்ட கருத்து. 

இதுவே ஜே.வி.பி.யின் திட்டமாகவிருப்பின் ஒரு கட்சி ஆட்சியே பல வருடங்களுக்கு தொடரும் அபாயம் காணப்படுகிறது. இதனையே சகல அரசியல் கட்சிகளும் அண்மையில் கூட்டிக்காட்டி வருகின்றன. நாடாளுமன்றத்தின் மூன்றிலிரண்டு அதிகாரம் தேசிய மக்கள் சக்தியின் விருப்பங்களுக்கேற்றவாறு அரசியல் சட்டங்களை மாற்றியமைக்க சாத்தியப்படும். நாடாளுமன்றத்தின் நிகழ்கால செயற்பாடுகள் சில இதற்குக் கட்டியம் கூறுகின்றன. 

இதுவே ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை கொள்கையானால் ஒரு கட்சி ஆட்சி என்பது நிலைபேறாகிவிடும். அதன் பின்னர் புதிய அரசியலமைப்பு, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பவை கானல் நீர்தான். இதனைத்தான் 'எந்தவோர் அழுத்தத்துக்கும் அடிபணிய தயாராக இல்லை" என்று ஜனாதிபதி அநுர குமர தெரிவித்தாரா?

No comments