மகிந்தவும் வீட்டை விட்டு வெளியேறினார்!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார்.

கொழும்பு, விஜேராம வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அரசியல்வாதிகள்,வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் ஆதரவாளர்கள் என பல்லேறு தரப்பினர் வியாழக்கிழமை (11) காலை முதல் வருகை தந்திருந்தனர். 

இன்றைய தினம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அனைவரும் அங்கு சென்றனர்.

சீனத்தூதுவர் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், அரசியல்வாதிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தந்தனர்.

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் புதன்கிழமை (9) பாராளுமன்றத்தில் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலத்தில்  சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தனது கையொப்பத்தையிட்டு நேற்றையதினம் சான்றுரைப்படுத்தினார். 

இதற்கமைய குறித்த சட்டமூலம் 2025ஆம் ஆண்டின் 18ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமாக நடைமுறைக்குவந்துள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இன்று வெளியேறுவார் என்ற தகவல் வெளியான நிலையிலேயே அரசியல்வாதிகளும் இராஜதந்திரிகளும் ஆதரவாகளர்களும் அசரைச் சந்தித்து நலம் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பிலுள்ள விஜேராம வீதியில் அமைந்துள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து சற்று முன் வெளியேறினார்.


இன்றைய தினம், மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே, தற்போதைய சூழ்நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 24 மணிநேரம் கூட உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

ஊடகங்களுக்குப் பேசிய மனோஜ் கமகே, முன்னாள் ஜனாதிபதி இன்று தங்காலைக்குப் புறப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார். 

இருப்பினும், அரசுக்குச் சொந்தமான அனைத்து உடைமைகளுடன், அந்த வீட்டை அதிகாரப்பூர்வமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்க சுமார் ஒரு வாரம் ஆகும் என்று அவர் கூறினார். 

No comments