ஜனாதிபதிகள் சலுகை நீக்கம் அரசியல் பயங்கரவாதமா? அரசியல் கலாசார மாற்றமா? பனங்காட்டான்


நாமல் ராஜபக்சவின் எதிர்கால உயர்ச்சியை மையப்படுத்தி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள அரசியல் பயங்கரவாதமும், இதனை மறுதலிக்கும் வகையிலான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள அரசியல் கலாசார மாற்றமும், சில வருடங்களுக்கு தொடரப்போவதாக எதிர்பார்க்கப்படும் ஒற்றை ஆட்சி முறையைத் தீர்மானிக்கும் கருக்களாக அமையக்கூடும். 

இலங்கை அரசியலில் இரண்டு விடயங்கள் கடந்த வாரம் முக்கியமானவையாக அமைந்தன. ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதிப்பொறிமுறை மறுப்பும், முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதும் இவை. 

ஜெனிவாவிலும் கொழும்பிலும் என்னென்ன நடைபெறுமென்று எதிர்பார்க்கப்பட்டனவோ அதுவே நடைபெற்றுள்ளது. ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி.)யின் ஆட்சியில் முதல் வருட பூர்த்தி மாதத்தில் இந்த விடயங்கள் இடம்பெற்றுள்ளது வரலாற்றில் இடம்பெறப்போகிறது. 

போர்க்கால மனித உரிமை மீறல்களுக்கு நீதியான தீர்வு கிடைக்க வேண்டுமானால்(?) அதற்கு சர்வதேச நீதிப்பொறிமுறை கலந்த பொறுப்புக்கூறல் விசாரணையே தேவையென்பது பாதிக்கப்பட்ட தரப்பின் ஏகோபித்த நிலைப்பாடு. தமிழ் அரசியல் தரப்புகள் தமக்குள் எப்போதும் மோதிக்கொண்டிருந்தாலும், ஜெனிவா விடயத்தில் இப்போது ஒரே கோட்டுக்கு வந்துள்ளன. 

அதேபோன்று, சிங்கள அரசியல் தலைமைகளும் அவர்களின் அரசாட்சித் தரப்புகளும் தேர்தல்களின்போது மாறிமாறி கதிரை ஏறினாலும், அரச பயங்கரவாதத்துக்கு துணையாக நிற்கும் தங்கள் இராணுவத்தைக் காட்டிக்கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தங்களுக்கான நேர்க்கோட்டில் நின்றே வருகின்றன. இதில் அநுர குமர ஆட்சியும் மாறுபாடில்லை. 

மனித உரிமைப் பேரவையின் தொழில்நுட்ப உதவியுடன் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் மனித உரிமை மீறலுக்கு பொறுப்புக்கூறல் செயல்வழியில் ஈடுபட தாங்கள் தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் (தமிழரசுக் கட்சி தனது அறிக்கையில் குறிப்பிட்டதுபோல வெளிநாட்டு அமைச்சர் அல்ல) விஜித ஹேரத் ஜெனிவாவில் வைத்துத் தெரிவித்துள்ளார். 

பேரவையின் அறுபதாவது கூட்டத்தொடர் கடந்த எட்டாம் திகதி ஆரம்பமானபோது மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தமதுரையில், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து இலங்கை அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டதோடு, பல தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த வன்முறை மற்றும் தண்டனையின்மை சுழற்சிகளிலிருந்து மீள்வதற்கான சிறப்பு மிக்க வாய்ப்பை இலங்கை இப்போது பெற்றுள்ளது என்று சுட்டியிருந்தார். 

வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பு என்று மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்ட சொற்பதம் உட்பொருளில் பல அர்த்தங்களை உள்ளடக்கியது. இலங்கையில் முன்னெப்போதும் ஆட்சி புரியாத ஒரு தரப்பு, போர்க்காலத்தில் நேரடியாக சம்பந்தப்படாத ஒரு கட்சி, அரச கெடுபடிகளாலும் வன்முறைகளாலும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட ஓர் அணி, மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளதால் நீதிக்கான பொறிமுறைகளால் தீர்க்கமான முடிவுக்கு வர முடியுமென்ற எதிர்பார்ப்பை இது அர்த்தப்படுத்துகிறது. 

என்னதான் ஜெனிவாவில் சொன்னாலும், எவ்வகைத் தீர்மானங்களை நிறைவேற்றினாலும் அவைகளை ஏற்று செயற்படுத்தினால் சிங்கள பௌத்தத்தின் ஆதரவை தாங்களும் இழந்து விடுவோம் என்ற மனப்போக்கு அநுர குமர அரசுக்கும் இருக்கிறது. அதனால் எவ்வாறான வாக்கியங்களோடு அறிக்கைகளையும் தீர்மானங்களையும் முன்வைத்தாலும் அவைகளை தாங்கள் பயன்படுத்தத் தயாரில்லை என்பதை அமைச்சர் விஜித ஹேரத்தின் அறிவிப்பு அப்பட்டமாகத் தெரிவிக்கிறது. 

பேரவையின் கூட்டத்தில் மட்டுமுன்றி மனித உரிமைகள் ஆணையாளருடனான தனிச் சந்திப்பிலும் தமது அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் ஹேரத் தெரிவித்திருப்பதைக் கவனிக்க வேண்டும். முன்னைய காலங்களைப் போன்று இம்முறையும் பேரவையின் உறுப்பு நாடுகள் இலங்கைக்கான ஆதரவையும், நீதி கோரலையும் பிரிந்து நின்று தெரிவித்துள்ளன. இலங்கையின் மனிதப் புதைகுழிகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்று பிரித்தானியா கோரியது. ர~;யா, பாகிஸ்தான் உட்பட்ட நாடுகள் இலங்கையின் பக்கம் தங்கள் குரலை வெளிப்படுத்தின. 

இந்தியா வழமைபோன்று பதின்மூன்றாம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியது, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, மாகாண சபைகளுக்கான தேர்தல் என்ற கோரிக்கைகளை இங்கு முன்வைத்தது. இது தொடர்பான ஒரு சந்திப்பை இலங்கையிலுள்ள இந்திய ஸ்தானிகர் தமிழர் தரப்புடன் ஆரம்பித்திருப்பதையும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசுடன் பேசிக் கொண்டிருப்பதைவிட பெற வேண்டியவைகளை பெற்று நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெயசங்கர் சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் தம்மைச் சந்தித்த தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கூறியதை இப்போது நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. 

ஜெனிவாவில் தற்போதைய கூட்டத்தொடரில் இறுதிப் பகுதியில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானமொன்றை பிரி;த்தானியா, கனடா, மலாவி, மொன்டிநீக்ரோ, வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் முன்வைக்கவுள்ளன. வழமையாக இவ்வகையான தீர்மானங்களின் வாக்கெடுப்பின்போது அதில் வாக்குரிமை பெற்ற நாடுகளில் கூடுதலானவை தீர்மானத்தை ஆதரிப்பதுண்டு. ஆனால் இலங்கை அரசு, வாக்களிப்பில் பங்குபற்றாத நாடுகளின் எண்ணிக்கையையும் எதிர்த்து வாக்களிக்கும் நாடுகளின் எண்ணிக்கையோடு சேர்த்து தீர்மானத்தை ஏற்காத நாடுகள் அதிகமென்று அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர்ப்பதற்காகப் போலும் இம்முறை வாக்களிப்பிலிருந்து இலங்கை விலகக் கூடுமென எதிர்வு கூறப்படுகிறது. 

ஜெனிவா திருவிழா இவ்வாறு போய்க்கொண்டிருக்கையில், உள்நாட்டில் அநுர குமர ஆட்சியின் முதலாவதாண்டு பூர்த்தியை இந்த மாதத்தில் ஜே.வி.பி.யினர் கொண்டாடுகின்றனர். கடந்த இரண்டாம் மூன்றாம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்ட அநுர குமர பல நிகழ்வுகளில் பங்குபற்றி உரையாற்றினார். கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல் காலங்களில் காணப்பட்ட பொதுமக்களின் ஆரவாரமோ அக்கறையோ இம்முறை காணப்படவில்லை. 

இதனை நிவர்த்தி செய்வது போன்று தெற்கில் அரசியல் சமாசாரங்கள் சூடு கண்டன. முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்கும் சட்டம் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோதபாய ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க மற்றும் ரணசிங்க பிரேமதாசவின் விதவை மனைவி ஆகியோருக்கு, அரச குடியிருப்பு உட்பட பல சலுகைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. 

கடந்த பல மாதங்களாக விஜேராம மாவத்த பங்களாவிலிருந்து வெளியேற மறுத்து வந்த மகிந்த ராஜபக்ச புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே அங்கிருந்து வெளியேறி தமது சொந்த ஊரான தங்காலையிலுள்ள இல்லத்துக்குச் சென்றுள்ளார். அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் நாளான செப்டம்பர் 11ல் இந்த வெளியேற்றம் இடம்பெற்றது தற்செயலானது. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அரசியலை ஆரம்பித்த தமது சொந்த ஊருக்கு மகிந்த திரும்பியுள்ளார். சற்று ஓய்வின் பின்னர் மீண்டும் கொழும்பு திரும்பி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். 

இலங்கையின் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொருவர் தமது வீடுகளை மகிந்தவுக்கு வழங்கத் தயாராகவுள்ளனர் என இவரது பொதுஜன பெரமுன சில வாரங்களுக்கு முன்னர் பகிரங்கமாக அறிவித்து இவரை தேசிய மகாபுருசராக்க முனைந்தது. ஆனால் அப்படியெதுவும் இடம்பெறவில்லை. ஆனாலும் விஜேராம மாளிகை வெளியேற்றத்தை தமக்கான ஆதரவு அலையாக மாற்றுவதில் பெரமுனகாரர்கள் அக்கறை காட்டினர். தங்காலை வீட்டில் அவர் குடியேறுவதையும் அவ்வாறே மாற்ற முனைந்தனர். ஆனால் எல்லாம் ஒரு நாள் நாடகமாக முடிந்தேறியது.

ஜனாதிபதிகள் சலுகைகள் நீக்கச் சட்டம் ஒருவருக்காக கொண்டு வரப்பட்டதல்ல. முன்னாள் ஜனாதிபதிகள் அனைவருக்குமானது. மைத்திரிபால சிறிசேன அமைதியாக தமது வீட்டுக்குச் சென்றுவிட்டார். ரணிலும் கோதபாயவும் தங்கள் சொந்த வீட்டில் இருந்ததால் அவர்கள் வெளியேற வேண்டியிருக்கவில்லை. சந்திரிக குமாரதுங்க நிலைமை சற்று வித்தியாசமானது. புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே தொடர்ந்து அரச வீட்டில் தாம் இருப்பதற்கு முழு வாடகை செலுத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

கொழும்பு கறுவாக்காட்டிலுள்ள றோஸ்மீட் பிளேஸ் இல்லத்தை விற்று கிடைத்த பணத்திலேயே தாம் வாழ்ந்து வருவதாகவும், அதில் பதினான்கு மில்லியன் ரூபாவை தற்போது குடியிருக்கும் அரசாங்க வீட்டுக்கு செலவிட்டதாகவும், தமக்கு இரு தடவை புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அண்மையில் இடறி விழுந்ததால் இடுப்பு அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு அசைவதில் சிரமப்படுவதாகவும் தமது கடிதத்தில் தெரிவித்துள்ள சந்திரிக குமாரதுங்க, புதிய வாடகை வீட்டில் குடியேற இரண்டு மாதங்கள் தவணை தருமாறும் அரசாங்கத்திடம் கோரியுள்ளார். சந்திரிக ஆட்சியில் ஜே.வி.பி. 39 உறுப்பினர்களோடு தாம் அமைச்சராகவிருந்த காலத்தை நினைவிருத்தி சிலவேளை கருணை அடிப்படையில் சந்திரிகவுக்கு தவணை வழங்க அநுர குமர விரும்பலாம். அரசியல் என்றால் இதுதானே. 

மற்றைய முன்னாள் ஜனாதிபதிகள் புதிய சலுகைகள் நீக்க சட்டத்தை ஏற்று தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டாலும், மகிந்தவால் மட்டும் அது முடியவில்லை. தமது மகன் நாமலுக்கு ஜனாதிபதி மகுடம் சூட்டுவதையே இலக்காகக் கொண்டு தமது இயலாமையையும் மறந்து அரசியலில் தொடர விரும்புகிறார். இதன் முதல் அங்கமாக தமக்கு இழைக்கப்பட்டதை அரசியல் பயங்கரவாதம் என்று நாமம் சூட்டியுள்ளார். புலிப்பயங்கரவாதத்தை முடித்து வைத்த தங்கள் தலைவர் மீது அரசியல் பயங்கரவாதம் ஏவப்பட்டுள்ளது என்று இவரது பெரமுனகாரர்கள் கோசம் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இதற்குப் பதிலளித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அரசாங்கத்தின் செயற்பாட்டினை அரசியல் கலாசார மாற்றம் என்று விளக்கமளித்துள்ளார். 

நாமல் ராஜபக்சவின் எதிர்கால உயர்ச்சியை மையப்படுத்தி மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ள அரசியல் பயங்கரவாதமும், இதனை மறுதலிக்கும் வகையிலான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள அரசியல் கலாசார மாற்றமும், சில வருடங்களுக்கு தொடரப்போவதாக எதிர்பார்க்கப்படும் ஒற்றை ஆட்சி முறையைத் தீர்மானிக்கும் கருக்களாக அமையக்கூடும். 

No comments