தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்புவதில் கஜேந்திரகுமார் அணி மும்முரம் - மணிவண்ணன் குற்றச்சாட்டு
தாயகத்தில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்புவதில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் , அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது , தமது எஜமானர்களுக்கு சேவகம் செய்வதாக , யாழ் . மாநகர சபையின் முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நினைவு வாரத்தில் நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் தொடர்பிலும், அவர் உண்ணாவிரதம் இருந்த நாட்களில் அவர் பட்ட வேதனைகளையும் ஆவணப்படுத்தி , ஆவண காட்சி கூடத்தை கடந்த 02 வருடங்களாக நடாத்தி வருகிறோம்.
இம்முறை நாம் காட்சி கூடம் நடாத்தும் , மாநகர சபைக்கு சொந்தமான காணியை எம்மை காட்சி கூடம் நடாத்த விடாது தடுக்கும் முகமாக சைக்கிள் கட்சியினர் அவ்விடத்தை முன் பதிவு செய்துள்ளனர். அதனால் எமக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
எங்களுடைய நிகழ்வுகள் மிக உணர்வு பூர்வமாக அவ்விடத்தில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளையும் மாவீரர் நிகழ்வுகளையும் குறித்த காணியில் நடத்தி வந்தோம். இந்நிலையிலையே அந்த காணியை தற்போது சைக்கிள் கட்சியினர் முன் பதிவு செய்துள்ளனர்.
இவர்கள் அரச தரப்புடன் இணைந்து நினைவேந்தல் நிகழ்வுகளை நீர்த்து போக செய்வதற்கு பல வருடங்களாக முயன்று வருகின்றனர். அதன் ஒரு அங்கமாகவே தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளை நாங்கள் நடாத்த கூடாது எனவும் , அவரது நினைவுகளை சுமந்த ஆவணப்படுத்தல்கள் காட்சி கூடத்தை நடாத்த விட கூடாது என்பதற்காக நாம் வழமையாக செய்யும் யாழ் . மாநகர சபை காணியை அடாத்தாக தாமும் முன் பதிவு செய்துள்ளனர்.
மாநகர சபைக்கு சொல்லி இருக்கின்றனர். தமக்கு தராமல் விட்டால் , யாருக்கும் அந்த காணியை கொடுக்க கூடாது என கூறியுள்ளனர்.
தியாக தீபத்தின் நினைவேந்தல் ஆரம்பமாகும் நிலையில். இவர்கள் இவ்வாறாக அடாத்தாக செயற்படுகின்றனர்.
இவர்கள் தற்போது முன்னாள் ஆயுத குழுக்களுடனும் , தேசிய மக்கள் சக்தியுடனும் வெளிப்படையாக இணைந்து , உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைத்துள்ளனர். ஏனெனில் அவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளை மதிப்பவர்கள் அல்ல தியாக தீபத்தின் வீர சாவுக்கு காரணமானவர்கள் உடன் தான் இவர்கள் தற்போது கூட்டு வைத்துள்ளனர்.
தாயகத்தில் நடைபெறும் நினைவேந்தல்களை கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் தலைமையிலான அணியினர் குழப்பும் விதமாகவே கடந்த காலம் தொட்டு செயற்பட்டு வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை மிக உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு முன்னெடுத்து வரும் போது , அதனை குழப்பினர். மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்பினர், நல்லூரில் தியாக தீபத்தின் நிகழ்வுகளை குழம்பினார், மாவீரர் துயிலுமில்லங்களில் குழப்பங்களை ஏற்படுத்தினார்.
இவ்வாறாக அவர்கள் தமிழ் மக்களின் உணர்வு பூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகளை காலகாலமாக குழப்பி வருகின்றனர்.
இந்நிலையிலையே , தியாக தீபத்தின் ஆவண காட்சி கூடத்தை குழப்பும் விதமாக அக் காணியை தாம் முன் பதிவு செய்து , அந்த காணியில் நிகழ்வுகளை நடாத்த விடாது தடுத்துள்ளனர்.
தியாக தீபத்தின் தியாகத்தை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து கூறும் முகமாகவே அக் காட்சி கூடத்தை அமைத்து அவற்றின் ஊடாக நாம் வரலாற்றை கடத்தி வந்தோம். அதனை பொறுக்க முடியாதவர்கள் , தமது ஏவலாளிகளாக இவர்களை பயன்படுத்தி அதனை தடுத்துள்ளனர்.
தமது சொத்துக்களையும் , தமது சுயலாபத்திற்காகவும் , தமிழ் மக்களை பகடை காய்களாக்கும் செயற்பாட்டை கஜேந்திரகுமார் அணியினர் கைவிட வேண்டும் என மேலும் தெரிவித்தார்.
Post a Comment