வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் களோபரம்
யாழ்ப்பாணம் வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு , பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டமை , கூட்டத்தில் கருத்து கூற முற்பட்ட பொதுமகன் ஒருவருக்கு அனுமதி வழங்கப்படாதமை உள்ளிட்ட சம்பவங்களால் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் காரசமாக நடந்து முடிந்துள்ளது
வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் , பிரதேச செயலர் அகிலன் ஆகியோரின் இணைத்தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னதாக, வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் இவருக்கே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க முடியும் என சுற்றுநிரூபத்தினை காண்பித்து ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
அதனால் பிரதேச சபை உறுப்பினர்கள் ஒன்று திரண்டு தாம் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என பிரதேச செயலக வாசலில் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதன் போது கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவனையும் வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையில் நீண்ட வாக்குவாதத்தின் பின்னர் சபை உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கோரினார். அதனால் காலை 10 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய கூட்டம் 10.30 மணியளவிலையே நடைபெற்றது.
கூட்டம் ஆரம்பமான போது பிரதேச சபை தவிசாளருக்கு இணைத்தலைவர்களுக்கு அருகில் ஆசனம் ஒதுக்கப்படாதமை , சபை உறுப்பினர்களுக்கு உரிய இடங்களில் ஆசனம் ஒதுக்கப்படாதமை உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதன் போது, வேலணை பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீண்ட நாட்களாக ஓரம் கட்டும் செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகிறது. இதொரு அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாகவே நாங்கள் கருதுகிறோம் என பிரதேச சபை உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதன் போது, கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமகன் ஒருவரும், உறுப்பினர்களுக்கு ஆசனம் ஒதுக்கப்படாதமை குறித்து தனது கருத்தை கூறிய போது நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவனின் உத்தரவுக்கமைய , அவரது ஒலிவாங்கி பறிக்கப்பட்டது.
நீண்ட கருத்து மோதலுக்கு பின்னர் பிரதேச சபை தவிசாளர் , உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கூட்டம் சுமூகமான முறையில் நடைபெற்றது.
Post a Comment