காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும்
யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
அதன் போது, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், மீனவர்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் பற்றியும் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
அதனை தொடர்ந்து மீனவர்கள் மற்றும் மக்களிடம், நடந்தவற்றை கேட்டறிந்து பொலிஸாரால் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பற்றியும் அமைச்சர் எடுத்து கூறினார்.
அத்துடன், சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்கள் என்பவற்றுக்கு நிச்சயம் முடிவு கட்டப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது. இனி சட்டத்தின் ஆட்சி தான் நடக்கும் என்பதை வன்முறை கும்பல்கள் புரிந்துகொள்ள வேண்டும். சட்டத்தின் பிடிக்குள் இருந்து தவறிழைத்தவர்கள் தப்பவே முடியாது என அமைச்சர் மக்களிடம் குறிப்பிட்டார்.
Post a Comment