கடலட்டை பண்ணைகள்: முன்னாள் - இந்நாள் மோதல்!


முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்ட அட்டை பண்ணை உரிமையாளர்கள் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடல் அட்டைப் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடலின் போது கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் எனவும் நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசாங்கத்திற்கு பணம் கட்டினால் போதும் எனவும் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சி காலங்களில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்திருந்த காலப்பகுதியில் கடல் அட்டை பண்ணைகளுக்கு எதிராக சந்திரசேகரர்; கருத்து தெரிவித்து வந்தார்.

தற்போது அமைச்சராக உள்ள நிலையில் சட்ட விரோதமாக கடல் அட்டை பண்ணைகளை மேற்கொண்டு வருகின்றவர்களை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமையை காணக்கூடியதாக உள்ளதாக டக்ளஸ் ஆதரவு கடலட்டை பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த காலங்களில் சீன நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் கடல் அட்டை உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

அவ்வாறான ஒரு நிலையில் ஆழம் குறைந்த யாழ்குடா கடற் பரப்பில் பாரம்பரிய மீன் பிடியை நம்பி பல கடற்றொழில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடல் அடi;ட பண்ணைகளை மீள ஏக்கர் கணக்கில் வழங்க முற்படுவது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பல் தேசிய கம்பனிகளை ஊக்குவிக்கும் செயற்பாடா எனவும் டக்ளஸ் ஆதரவு தரப்புக்கள் கேள்வி எழுப்பியுள்ளன.


No comments