அனுரவுக்கு நேரமிருந்தால் செம்மணி வருவாராம்?
இலங்கை முழுவதும் பல மனித புதைகுழிகள் உள்ள நிலையில் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பெரிதும் அலட்டிக்கொள்ள தேவையில்லையென அரச நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களது கோரிக்கையின் பேரில் அடுத்தமுறை நேரமிருந்தால் ஜனாதிபதி செம்மணி புதைகுழியை பார்வையிடுவார் எனவும் இளங்குமரன் ஊடகங்களிடையே தெரிவித்துள்ளார்.
இதனிடையே செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் மேலும் 4 மனித எலும்புக்கூடுகள் இன்று வியாழக்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 235 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 224 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய அகழ்வு பணிகள் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் எஸ். லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றிருந்தன.
இதனிடையே கிழக்கில் கல்முனை, களுவாஞ்சிகுடி மற்றும் குருக்கள் மடம் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹரச்ண நாணயக்கார மனித புதைகுழிகள் இருப்பதாகக் கூறப்படும் பகுதிகளை பார்வையிட்டுள்ளார்.
புதைகுழி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
அமைச்சரின் பயணத்தின் போது மட்டக்களப்பில் உள்ள காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள், உடனிருந்ததாக கூறப்படுகின்றது.
Post a Comment