படகுகளை மீட்க யாழ். வந்த தமிழக கடற்தொழிலாளர்கள் நாடு திரும்பினர்


இலங்கையில் உள்ள தமது படகுகளை நேரில் பார்வையிட்டு , அதனை மீட்டு செல்வது தொடர்பில் ஆராய்வதற்காக  தமிழகத்தில் இருந்து வருகை தந்த 14 பேர் கொண்ட குழுவினர் நேற்றைய தினம் மாலையே யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகம் திரும்பினர். 

கடந்த 2022 - 2023ஆம் ஆண்டு கால பகுதிகளில் , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகள் மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. 

குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுற்று , நீதிமன்றினால் , படகுகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும் , அவற்றை மீண்டும் தமிழகம் எடுத்து செல்வதில் சிக்கல் நிலைமைகள் காணப்பட்டமையால் , அது தொடர்பில் படகு உரிமையாளர்கள் , இந்திய மற்றும் இலங்கை அரசாங்கத்திடம் தமது படகுகளை தம்மிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இருந்தனர். 

இந்நிலையில் , இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு கடந்த வாரம் படகுகளை படகின் உரிமையாளர்கள் மீட்டு இந்தியாவிற்கு எடுத்து செல்ல அனுமதி அளித்தனர்.

அதனை அடுத்து, நேற்றைய தினம் திங்கட்கிழமை இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா தலைமையில் படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழு விசைப்படகு ஒன்றில் யாழ்ப்பாணம் வருகை தந்தனர். 

அவர்களை இலங்கை - இந்திய கடல் எல்லையில் வைத்து , இலங்கை கடற்படையினர் பொறுப்பேற்று , காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்று , அங்கிருந்து அவர்களின் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள மயிலிட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். 

அங்கு நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட ஏழு படகுகளையும் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு , அவற்றின் தரங்களை பரிசோதித்த பின்னர் அவற்றினை பிறிதொரு படகு மூலம் கட்டி இழுத்து தமிழகம் கொண்டு செல்ல முடிவெடுத்த நிலையில்  , அதற்கான ஏற்பாடுகளை செய்ததன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தீர்மானித்து , நேற்றைய தினம் மாலையே அவர்கள் படகு மூலம் தமிழகம் திரும்பினர்.

அதேவேளை , இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 124 படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் 07 படகுகளே விடுவிக்கப்பட்டுள்ளன. 

இந்திய மீனவர்களின் படகுகள் மயிலிட்டி மீன் பிடித்துறை முகத்தை அண்டிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால் , அப்பகுதி மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் , அதனால் குறித்த படகுகளை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments