தமிழரசு கட்சிக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு
வலி. வடக்கு பிரதேச சபையின் தமிழரசு கட்சியின் உறுப்பினரான தன்னை கடிதம் மூலம் கட்சியின் பொது செயலாளர் இடைநிறுத்தியமையை சவாலுக்கு உட்படுத்தி யாழ் . மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின் போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து குறித்த பிரதேச சபை உறுப்பினர், சுமந்திரன் தன்னை எந்த அடிப்படையுமற்று மத்தியக்குழுவின் தீர்மானம் எதுவுமின்றி கட்சியில் இருந்து தன்னிச்சையாக நீக்கியதாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த தவணை குறித்த வழக்கில் முன்னிலையான தமிழரசு கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் ஆகியோர் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த ஆட்சேபனைக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தமது பதில் ஆட்சேபனையை பிரதேச சபை உறுப்பினர் தாக்கல் செய்திருந்தார்.
அதில் குறித்த கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனையானது ஒரு பகுதி ஆங்கிலத்திலும் அதன் மறு பகுதி தமிழிலும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது,
யாழ்ப்பாணத்தில் நீதி நிர்வாக மொழி தமிழ் ஆகையால் முழுமையாக தமிழிலேயே ஆட்சேபனை தாக்கல் செய்யப்பட வேண்டும் என பிரதேச சபை உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த ஆட்சேபனையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Post a Comment