இந்தியா, பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 170க்கும் மேற்பட்டோர் பலி!


இந்தியா, பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 170க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மேக வெடிப்புகள் மற்றும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 176 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இன்னும் பலரைக் காணவில்லை என்றும் பாகிஸ்தான் மற்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிவாரணப் பணிகளுக்கு உதவியாக இருந்த உலங்கு வானூர்தியும் விபத்துக்குள்ளானது.

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள சோசிட்டி என்ற தொலைதூர இமயமலை கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை வெள்ளத்தில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். மீட்புப் பணியாளர்கள் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.

நேற்று வியாழக்கிழமை குறைந்தது 300 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் காணாமல் போன 200 பேரில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

வடக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 116 பேர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மலைப்பகுதியிலிருந்து 1,300 சுற்றுலாப் பயணிகளை மீட்புப் பணியாளர்கள் வெளியேற்றினர். இந்தப் பகுதிகளில் குறைந்தது 35 பேர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் வடமேற்கு மாவட்டமான கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள புனேர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கனமழை மற்றும் மேக வெடிப்புகளால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டதாக அரசாங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை, கைபர் பக்துன்க்வா முழுவதும், மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் கூரை இடிந்து விழுந்ததில் 110க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஹெலிகாப்டர் வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் விபத்துக்குள்ளானதாக கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


No comments