அநுர அவர்களே! காலம் எவருக்காகவும் காத்திருக்காது! பனங்காட்டான்


காலம் ஒருபோதும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. அது எமக்கானதாக அமையும்போது அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறவிட்டால் பதவிக் கதிரை முக்காலியாகி, ஒன்பதோடு பத்தாகிவிடும். காலமும் காலமாகிப் போகும். 

தோழர் ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க அவர்களுக்கு, 

கடந்த வாரம் எழுதிய கடிதத்தின் இரண்டாம் பகுதியாக இது அமைகிறது. கடந்த வாரம் எழுதத் தொடங்கியபோது எழுத எழுத விடயங்கள் தொடராக வந்தன (செம்மணி புதைகுழியிலிருந்து உடலங்கள் வந்ததுபோல). இக்கடிதம் மூன்றாம் பகுதிக்குச் செல்லக்கூடாது என்று நினைத்தவாறு தொடருகிறேன். 

செம்மணி புதைகுழிகளே இக்கடிதத்தின் மூல அம்சம். பொழிப்பாகச் சொல்வதானால் அரியாலை, சித்துப்பாத்தி இந்து மயானத்திலிருந்து மீட்கப்படும் அப்பாவி தமிழர்களின் எலும்புக் கூடுகள். நீதிபதி ஒருவரதும், மருத்துவ நிபுணர் ஒருவரதும் மேற்பார்வையில் இவை மீட்கப்படுகின்றன. யுனிசெஃப் அடையாளம் பொறிக்கப்பட்ட பாடசாலைப் பையுடன் காணப்பட்ட எலும்புக்கூடு நான்கு - ஐந்து வயதுக்குட்பட்ட பிஞ்சுப் பெண்குழந்தையுடையது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்த கட்ட அகழ்வு இந்த மாதம் 21ம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இன்னும் எத்தனை எத்தனை எலும்புக்கூடுகள் (இப்படி எழுத மனம் விரும்பவில்லை. இவை எமது காணாமற்போன உறவுகளின் எஞ்சிய உடற்பாகங்கள்) மீட்கப்படப் போகின்றனவோ என்ற ஏக்கத்துடன் ஒவ்வொருவரும் இருப்பதை நீங்கள் நிச்சயம் உணருவீர்களென நாம் நம்புகிறோம். 

இவ்வாறு நான் குறிப்பிடுவதற்கு நியாயமான காரணம் உண்டு. தேர்தல் காலத்தில் உங்களது உரையொன்றில் உங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட இரண்டு இழப்புகளை குறிப்பிட்டிருந்தீர்கள். உங்கள் சகோதரர் ஒருவர் காணாமலாக்கப்பட்டதாகவும், அவரது உடல் இதுவரை மீட்கப்படவில்லையென்றும் சொல்லியிருந்தீர்கள். உங்கள் தந்தையின் மரணச் சடங்கில் நீங்கள் பங்குபற்ற முடியாது போனதையும் கூறியிருந்தீர்கள். தலைமறைவாகியிருந்த உங்களை கைது செய்வதற்காக சீருடை அணிந்த படையினர் உங்கள் தந்தையின் இறுதிச் சடங்கு நாட்களில் அவ்விடத்தை சுற்றி வளைத்திருந்ததால் நீங்கள் பங்குபற்ற முடியாது போனதை கூறியிருந்தீர்கள். இதை உங்கள் தாயாரும் ஊடகம் ஒன்றில் தெரிவித்திருந்தார். (இதே அனுபவம் இதனை எழுதுபவனுக்கும் 1989 மே மாத இறுதியில் ஏற்பட்டது). இதனால் உங்கள் மனவேதனையை என்னால் உளமார உணர முடிகிறது. 

மீண்டும் விடயத்துக்கு வருவோம். செம்மணி புதைகுழி சம்பந்தமாக நீங்கள் எவ்வளவுக்கு அறிந்து வைத்திருக்கிறீர்கள்? இவ்விடயங்கள் தொடர்பாக தினசரி சரியான தகவல்கள் உங்களுக்குப் பகிரப்படுகிறதா? அனேகமாக அவ்வப்போது உண்மைத் தகவல்கள் உங்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்காது என்றே நம்புகிறேன். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல முடியும். 

1972ல் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் முடிசூடா ராணியாக ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, 1977 தேர்தலில் படுதோல்வி கண்டு எதிர்கட்சித் தலைவராகவே முடியாது போனார். தமக்கான தோல்வியின் காரணத்தை இந்திய ஊடக செவ்வி ஒன்றில் விளக்கிய சிறிமாவோ, தம்மைச் சுற்றியிருந்த முக்கியஸ்தர்கள் நாட்டு நடப்பை முழுமையாக மறைத்து உண்மைக்குப் புறம்பான, தவறான தகவல்களை தமக்குத் தந்து வழிநடத்தியதால், மக்கள் பிரச்சனைகளை தாம் அறிந்தி;ருக்காது போனதே படுதோல்விக்குக் காரணமென மனம்; திறந்து கூறியிருந்தார். 

ஜனாதிபதி, பிரதமர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு இந்தத் துரதிர்ஸ்ட நிலை ஏற்படுவது வழக்கம். இவர்களைச் சுற்றியிருப்பவர்கள் தங்கள் சுயதேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பதவிகளை தக்க வைக்கவும் இவ்வாறுதான் நடந்து கொள்வார்கள். நீங்களும் இந்த வலைப்பின்னலில் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவே இதனை இங்கு சுட்டுகிறேன். தயவு செய்து சகல பத்திரிகைகளையும், முக்கியமாக உங்கள் ஆட்சியை விமர்சிக்கும் ஊடகங்களை தவறாது படியுங்கள். 

நீங்களும் உங்கள் ஜே.வி.பி.யும் இதற்கு முன்னர் நாட்டை ஆளும் வாய்ப்பைப் பெற்றிராததால் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், வடக்கு கிழக்கு மனித புதைகுழிகள் விவகாரம், தமிழர் வழிபாட்டுத் தல விவகாரங்கள் தொடர்பாக ஆழமாக அறிந்திருக்க முடியாது போயிருக்கலாம். iவாயயெயட இவ்விடயங்களில் உங்கள் மீது விரல் நீட்டி குற்றஞ்சுமத்த முடியாது. இதனால் நீதியானதும், நேர்மையானதுமான விசாரணைகளை சர்வதேச ஆதரவோடு நடத்தி உண்மையைக் கண்டறியும் வாய்ப்பு உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. 

கடந்த வாரம் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் கொழும்பில் இடம்பெற்றன. முதலாவது ஜனாதிபதி அலவலகம் முன்னாலும், அடுத்தது கோட்டை புகையிரதம் முன்னாலும் இடம்பெற்றது. தங்கள் காணிகளை மீட்பவர்களின் போராட்டம் முதலாவதாகவும், புதைகுழிகள் தொடர்பானது இரண்டானதாகவும் இடம்பெற்றது. இந்த அமைதிப் போராட்டத்தை முன்னேற விடாது காவற்படையினர் வழக்கம்போல தடுத்து நிறுத்தினர். மூன்று மாதங்கள் அறகலய போராட்டம் நடத்திய உங்களை எதுவும் செய்ய முடியாது போன காவற்படை அமைதிப் போராட்டம் நடத்த்pய மக்களை தடுத்து நிறுத்தியுள்ளதை நீங்கள் அறிவீர்களா?

1971 ஏப்ரல் காலத்திலும், 1987-1989 காலங்களிலும் களனி கங்கையிலும் காலு கங்கையிலும் மிதந்து வந்த உடலங்கள், வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் வீசப்பட்டுக் கிடந்த தலையில்லாத முண்டங்கள், மக்கள் நடமாட்டம் உள்ள பாதைகளில் கழுத்துகளில் டயர் போடப்பட்டு அரைகுறையாக எரியுண்டு கிடந்த உடலங்கள் யாருடையவை? அனைத்தும் உங்கள் தோழர்களுடையவை. அரச பயங்கரவாதம் நடத்திய படுகொலைகள் இவை என்பதை இங்கு எழுதித்தான் உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமென்றில்லை. இவைகளை நினைவில் நிறுத்திப் பார்த்தால் தமிழர் பகுதிப் புதைகுழி அவலங்களை உங்களால் உய்த்துணர முடியும். 

செம்மணிக்கு அநுர அரசாங்கமே நீதியை நிலைநாட்டும் என்று தமிழர் விவகார அமைச்சராகக் காட்சி கொடுக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். வடக்கின் புதைகுழிகள் தொடர்பில் விரைவில் உண்மைகள் வெளிவரும் என்று நீதியமைச்சர் ஹர்சண நாணயக்கார கூறியுள்ளார். கடந்த ஈஸ்டர் சண்டே நினைவு நாளின்போது அந்தத் தாக்குதல் சூத்திரதாரி யாரென்பதை அறிவிப்போம் என்று நீங்கள் வழங்கிய உறுதிமொழி காற்றோடு காற்றாகிப் போனது போலத்தான் இவையும் போகுமா? 

நீங்கள் ஜனாதிபதியாகப் பதவியேற்று இன்னமும் ஒரு வருடம் ஆகவில்லை. உங்கள் கட்சியின் நாடாளுமன்ற ஆட்சி உருவாகி இப்போதுதான் எட்டு மாதங்கள் முடிவடைந்துள்ளது. தேர்தல் கால உங்கள் பரப்புரைகள் மீதான நம்பிக்கை காரணமாகவும், தமிழ் மக்களை வழிநடத்த நம்பகமான தலைமை இல்லாமையாலும் வடக்கிலும் கிழக்கிலும் சில பிரதிநிதிகளை தமிழர் வாக்குகளால் பெற்றீர்கள். இருப்பினும் உங்கள் தாய்க்கட்சி ஜே.வி.பி.யினது கடந்த கால கசப்பான அனுபவங்கள் ஐஞ்சறைப் பெட்டிக்குள் இன்னமும் இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். இவற்றுள் ஒன்றிரண்டு முக்கியமானவை. 

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் கொலைச் சம்பவம் தொடர்பில் ஜே.வி.பி. மீது குற்றம் சுமத்தப்பட்டது. 1996ல் இவர் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேசியிருந்தார். 1998 பெப்ரவரியில் கொல்லப்பட்டது தொடர்பாக சந்தேகத்தில் கைதான ஜே.வி.பி.யினர் இருவர் காணாமலாக்கப்பட்டனர். 

விஜய குமாரதுங்கவின் மனைவியான சந்திரிகா தலைமையில் உங்கள் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாக 2004ல் இணைந்து 39 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றீர்கள். அவ்வேளை உங்கள் அணிக்குக் கிடைத்த பதவிகளில் ஒன்றான விவசாயம், காணி, நீர்ப்பாசனம், கால்நடை ஆகியவற்றின் அமைச்சராக நீங்கள் நியமனம் பெற்றீர்கள். 2005 யூன் 16ம் திகதி நீங்கள் 39 பேரும் சந்திரிகா ஆட்சியிலிருந்து வெளியேறினீர்கள். அமைச்சர் பதவிகளையும் துறந்தீர்கள். ஏன்? 

சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பு வடக்குக்கும் தெற்குக்கும் பொதுவானதாக இருந்ததால், சுனாமி நிவாரணப் பணிகளை சந்திரிகா அரசும், விடுதலைப் புலிகளும் இணைந்து (Pவுழுஆளு) மேற்கொள்ள எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்தே வெளியேறினீர்கள். ஞாபகம் இருக்கிறதுதானே!

அடுத்தது, ஜே.ஆர். - ராஜிவ் இலங்கை இந்திய ஒப்பந்தம். இதில் இடம்பெற்ற 13ம் திருத்தத்தின்படி வடக்கிலும் கிழக்கிலும் இணைந்த மாகாண சபை முறைமை ஏற்கப்பட்டிருந்தது. இதனை நிரந்தரமாக்க கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் இவ்விடயம் அரசியலமைப்புக்கு முரணானது என்று சுட்டி உயர்நீதிமன்றத்தில் உங்களின் ஜே.வி.பி. வழக்குத் தாக்கல் செய்தது. சந்திரிகாவின் கைப்பொம்மையாக இயங்கிய பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்து வடக்கு கிழக்கு இணைப்பை இல்லாமலாக்கினார். 

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்றிருக்கவில்லையென்பது உங்கள் தரப்புக்கு நன்கு தெரியும். பாதிக்கப்பட்ட மக்கள் நலன் கருதியே அரசாங்கத்துடன் இணைந்து சுனாமி நிவாரணப் பணியை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் இணங்கினர். இதன் அர்த்தம் சந்திரிகா அரசுடன் சேர்ந்து ஆட்சியில் பங்கேற்பதல்ல என்பதும் உங்களுக்குத் தெரியும். அப்படியிருந்தும் இவ்விரு விடயங்களிலும் நீங்கள் முன்னெடுத்த செயற்பாடுகள் தமிழ் மக்களையே பாதித்தன என்றுதான் கூற வேண்டும். இருந்தும் உங்கள் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் நீங்கள் மறுபிறப்பு எடுத்தபோது தமிழர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். அதன் பலாபலன்களை நாடாளுமன்ற, உள்;ராட்சித் தேர்தல்களில் நீங்கள் சுவைத்தீர்கள். 

தமிழின அழிப்பில் ஈடுபட்டு அரச பயங்கரவாதத்தை மேலோக்கிய படைத்துறை அதிகாரிகள் இப்போது சுதந்திர வீரர்களாக பொது நிகழ்ச்சிகளில் காட்சி தருகிறார்கள். போர்க்கால குற்றங்களை மறைக்க போர் அனுபவங்கள் என்ற பெயரில் நூல்களை வெளியிடுகிறார்கள். இன்றும் தமிழர் காணிகள் படைகள் வசம் உள்ளன. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்கள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. .....இவ்வாறு பெரும் பட்டியலைத் தர முடியும். 

கடந்த கால நம்பிக்கையீனங்களின் மத்தியிலும், உங்கள் மீதான சிறு நம்பிக்கையின் பேரில் ஏதாவது நிவாரணம் கிடைக்குமென நம்பி இவைகளை இங்கு பதிவிட நேர்ந்துள்ளது. 

காலம் ஒருபோதும் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. அது எமக்கானதாக அமையும்போது அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறவிட்டால் பதவிக் கதிரை முக்காலியாகி, ஒன்பதோடு பத்தாகிவிடும். காலமும் காலமாகிப் போகும்.  

No comments