வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை


தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தும் அதேயளவு முக்கியத்துவத்தை சேவைகளை நாடும் பொதுமக்களின் நலனிலும் செலுத்தவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 

அரச ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது. 

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் - நிர்வாகம், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள மாகாண ஆணையாளர், உதவிப் பிரதம செயலாளர், சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஆயுள்வேத வைத்திய அதிகாரிகள் சங்கத்தால் வடக்கு மாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தில் புதிய பதவிநிலை ஆளணி உருவாக்கம், வெற்றிடமாகவுள்ள பதவிநிலைகள் தொடர்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

அத்துடன் சிற்றூழியர்களுக்கான பதவி உயர்வுகள், சிற்றூழியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கேட்டுக்கொண்டனர். 

மேலும், வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையின் கீழ் தாதியர் ஒருவர் கூட இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற விடயம் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

இடமாற்றங்கள் தொடர்பிலும், நியமனம் பெறுகின்ற வைத்தியர்களுக்கான நிலையங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறை திணைக்களத்தின் கீழ் மாகாண மட்டத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்வதில்லை எனவும் ஆனால் உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் கைவிரல் இயந்திரத்தில் வரவுப் பதிவு செய்யவேண்டும் என நிர்பந்திக்கப்படுவதாகவும் சங்கத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

இவை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆளுநர் பணிப்புரை வழங்கினார். 

No comments