7 மாதங்களில் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 37 பேர் உயிரிழப்பு
இந்த வருடத்தில் கடந்த 7 மாதங்களில் நாடு முழுவதும் 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இன்றைய தினம் திங்கட்கிழமை இதனைத் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025.01.01 முதல் 2025.07.13 வரை பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 50 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்புடையவை என்றும், ஏனைய 18 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மேற்படி 68 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 37 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் 34 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும், துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 30 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூடுகள் தொடர்பில் பொலிஸார் நடத்திய விசேட நடவடிக்கைகளின் போது, T56 ரக துப்பாக்கிகள் 23 , கைத்துப்பாக்கிகள் 46 மற்றும் 1,165 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளர், 68 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்திய 24 பேர், ஓட்டுநர்களாக செயல்பட்ட 15 பேர் மற்றும் அவர்களுக்கு ஆதரவளித்த 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post a Comment