வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன


வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் திங்கட்கிழமை கச்சாய் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் 3 ஆயிரம் மில்லியன் தேங்காய் உற்பத்தியை வருடாந்தம் நாம் எதிர்பார்த்தாலும் அதனை விடக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றது.

 வெள்ளை ஈ தாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கங்கள், விலங்குகளால் ஏற்படுத்தப்படும் சேதம் என பல காரணிகள் இதில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. 

2030ஆம் ஆண்டு 4,200 மில்லியன் தேங்காய்களை வருடாந்தம் உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்குடன் செயற்படவுள்ளோம். 

வெள்ளை ஈ தாக்கத்தால் யாழ். மாவட்டத்தில் மாத்திரம் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நாம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு அதிகமாகவே தேவை. 

150 இயந்திரங்கள், 150 பணியாளர்களை நாங்கள் இங்கு அழைத்து வந்துள்ளோம். இருப்பினும் ஓர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக் குறைந்தது 4 பேர் தேவை. எனவே எமது ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


No comments