“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி” - நல்லூரில் கண்காட்சி


நிலத்தடி நீர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வுக்கான  கண்காட்சிக் கூடம் இம்முறை நல்லூர் பெருந்திருவிழாவின் போது மக்கள் பார்வைக்காக உருவாக்கப்படவுள்ளது.

நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில், அரசடி வீதியில் அமைந்துள்ள “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில்” எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 24 வரை இக் கண்காட்சி  இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுவீடன் விவசாய பல்கலைக்கழகத்தின் சுழல் தொடர்பாடலியல் துறை தகைநிலை பேராசிரியர் நடராஜா சிறீஸ்கந்தராஜா இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

பல்வேறு பங்குதாரர்களின் பங்களிப்புடன் “வடமாகாணத்தின் நீர் பாதுகாப்பு - பங்காற்றல் செயல் ஆய்வு” எனும் தலைப்பிலான இச் செயற்றிட்டம்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளினது கூட்டு முயற்சியாக 2020ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வடமாகாணத்தின் அன்றாடத் தேவைகளாக, விவசாயம், தொழில்துறைகள் போன்ற பல தேவைகளுக்கு நிலத்தடி நீரினையே பெரிதும் நம்பியுள்ள நிலையில் இவ்வாறான தேவைகளின் அதிகரிப்புடன், சமூக மட்டத்தில்  நிலத்தடி நீரின் அதிக அகத்துறிஞ்சல், மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றங்கள் என்பன இந்நீர் வளத்தின்  நிலைத்திருப்பிற்கு அச்சுறுத்தலை அதிகரிப்பதனால்,  சமூக மட்டத்தில் நிலத்தடி நீர் தொடர்பான விழிப்புணர்வு, புரிந்துணர்வினை  ஏற்படுத்தும்  அவசியத்தை  தீவிரப்படுத்துகின்றது.

“நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி”  எனும் கருப்பொருள் நிலத்தடி நீர் பாதுகாப்பையும் அதன் நிலைத்திருப்பினையும் மக்கள் மத்தியில் குறிப்பாக இளையோர் மத்தியில் திறம்பட தெரிவிக்க முனைகிறது.

இக் கண்காட்சிக் கூடமானது  நிலத்தடி நீரின் பாதுகாப்பில் பல்வேறு மட்ட  பார்வையாளர்களின் செயற்படுதலை உறுதி செய்கிறது.  பொதுமக்கள், மாணவர்கள், இளையோர்கள், விவசாயிகள், அரச அலுவலர்கள் போன்ற ஒவ்வொரு பிரிவினரின் பங்களிப்பினை இலக்காகக் கொண்டு  கொள்கை வகுப்புக்கள் ஊடாக நிலத்தடிநீரின் நிலை பேறான முகாமைத்துவத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்த விளைகிறது.

நிலத்தடி நீர் பாதுகாப்பு தொடர்பாக பங்கேற்பாளர்களினை ஒருங்கிணைப்பதற்கும், அவர்களை ஈடுபடுத்தி தெளிவிப்பதற்கும் கண்காட்சிக்கூட கூறுகள் வடிவமைக்கப்படும். இவற்றில் நிலத்தடி நீரினை அவதானிக்கும் மாதிரி, நீரின் தரத்தை பரிசோதிக்கும் மாதிரி, நிலத்தடி நீரினை மீள்நிரப்பும் செயற்பாட்டினை வெளிப்படுத்தும் மாதிரி,   போன்றன காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவை அனைத்தும் நடைமுறையில் பார்வையாளர்களுக்கான கற்றல் மற்றும் அனுபவங்களை வழங்குகின்றன.  

மேலும் நிலத்தடி நீர் தலைப்புக்கள் தொடர்பாக நீர் வாண்மையாளர்கள் வழங்கும் குறுகிய வீடியோக்கள், செயலாற்றுகைகள்   பார்வையாளர்களை கண்காட்சிக் கூடத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்கும்  புதிர்கள்,  போட்டிகள் அமையவுள்ளன. அவர்களின் அறிவு மட்டத்தினை அளவிடவும்  காட்சிப்படுத்தப்படும் தண்ணீர் மாதிரி வடிவமைப்பு நீரின் தரத்தை அளவிடும் பரிசோதனையின் முக்கியத்துவம் தொடர்பாகவும், புதிய தன்னார்வ தொண்டர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு வாய்ப்புக்களை வழங்கவும், நிலத்தடி நீர் பாதுகாப்பு முயற்சிகளுக்கு சார்பான தனிநபர்களின் ஈடுபாடுகளையும் இக் கண்காட்சி உறுதி செய்கிறது என மேலும் தெரிவித்தார். 

No comments