தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு நல்கியவர்கள் இன்றைய அரசாங்கத்தின் தலைமைகள்
அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப் படுகொலைகள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ள நிலையிலும் சிறுவர் விடயத்தில் ஏனும் பொறுப்புக்கூறவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ அரசு தயாரில்லை. கொல்லப்பட்டவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்பதால் அதுபற்றிய குறைந்தபட்ச விசாரணையைக்கூட மேற்கொள்ள தயாரில்லை. இது நன்கு திட்டமிட்ட இனப்படுகொலை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.
வாதரவத்தை வீரவாணி சனசமூக நிலையத்தில் போரின்போது படுகொலைசெய்யப்பட்ட சிறார்களை விசேடமாக நினைவு கூர்ந்து முள்ளிவாய்க்கால் தினம் நேற்று சனிக்கிழமை மாலை அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்குக் கிழக்கில் போர் நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கான சிறார்கள் வகைதொகையின்றி படுகொலை செய்யப்பட்டார்கள். அவ்வாறாகக் சந்தேகத்திற்கு இடமின்றி சிறார்கள் அரசினாலேயே கொல்லப்பட்டார்கள். குமுதினி படகில் இருந்த குழந்தைகள் கடற்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டது, நாகர்கோவில் உள்ளிட்ட பாடசாலைகள் மீது விமானக்குண்டுகளை வீசி மாணவர்களை படுகொலை செய்தமை, முள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பு வலயம் என்று அரசே அறிவித்து விட்டு அப் பகுதிக்குள் இரசாயன கொத்துக்குண்டுகளை வீசி குழந்தைகளையும் சிறார்களையும் கொன்றமை என சிறுவர் படுகொலைகளை ஆதாரபூர்வமாக அடுக்கிச் செல்லலாம். யுத்தத்தின் பின்னும் குழந்தைகளுடனும் சிறுவர்களுடனும் சரணடைந்தவர்களின் கதி என்ன என்பதை அரசு வெளிப்படுத்தவில்லை.
இலங்கை அரசு சிறுவர்கள் தொடர்பான பல்வேறு சமவாயங்களில் உலகளவில் கைச்சாத்திட்டுள்ளது. பல சிறுவர் பாதுகாப்பு நிறுவன பொறிமுறைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது. ஆனால் இராணுவ பொறிமுறையின் முன் அவை சகலதும் செயலிழந்த நிறுவனங்கள் ஆகும். தமிழ்க்குழந்தைகள் விடயத்தில் அரசு சர்வதேச சமவாயங்களையோ சர்வதேச விதிமுறைகளையோ சட்டங்களையோ கடைப்பிடிக்கவில்லை. இன்றும் குழந்தைகளை அரசு எவ்வாறு கொன்றழித்தது என்பதற்கு நேரடி சாட்சியங்களும் ஆதாரங்களும் உள்ளன.
யுத்தத்தினை நடத்தியது மாறிமாறி ஆட்சிக்குவந்த அரசாங்கம் என்று கூறி இன்றைய அரசாங்கம் நிராகரித்துவிட முடியாது. தமிழ் மக்கள் மீதான போருக்கு இனவாதிகளாக ஆதரவு நல்கிய தரப்பாக இன்றைய அரசாங்கத்தின் தலைமைகள் உள்ளன. இலங்கையில் அரச கொள்கையாகவே தமிழ் மக்கள் மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் பாரதூரமான படுகொலைகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நடந்துள்ளன.
அரச படுகொலைகளுக்கு எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும் பொறுப்புக்கூறவேண்டும். இது தமிழ் மக்களின் அழுத்தமாக என்றும் காணப்படவேண்டும் என்றார்.
Post a Comment