காணிகளை விடுவிப்போம் - யாழில் ஜனாதிபதி உறுதி


மீண்டுமொரு யுத்தம் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணத்திற்காக என கையகப்படுத்தியுள்ள காணிகளை மீள பெற்று அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்போம் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார் 

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை வருகை தந்த ஜனாதிபதி சங்கிலியன் பூங்காவில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார் 

அதன் போது உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்

நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்கள் மக்களை பிரித்துள்ளன. ஆனால் கடந்த பொது தேர்தலின் போது வடக்கு, கிழக்கு, தெற்கு, தமிழ், முஸ்லீம், சிங்கள மக்கள் என அனைவரும் ஒன்றுபட்டு வாக்களித்தனர்.

அப்படிப்பட்ட ஒன்றிணைந்த தேர்தல்களே வேண்டும். மீள பிரிய மக்கள் பிரிந்து வாக்களிக்க வேண்டாம்.  தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் என அனைவரும் ஒரு நாட்டு மக்களாக ஒன்றாக வாழ வேண்டும்.

சகல மக்களுககும் சமனான உரிமை வேண்டும். அவ்வாறான நாடு தான் எமக்கு தேவை. 

கடந்த காலங்களில் போர் புரிந்தோம் அதனால் என்ன நடந்தது ? அழிவுகளை தான் சந்தித்தோம். எம் உறவுகளை இழந்தோம். வடக்கிலும் தெற்கிலும் அதே நடந்தது. மீள அப்படி ஒரு நிலை எமக்கு வேண்டாம்

எங்கள் தலைமுறைகள் போர் புரிந்தோம் அடுத்த தலைமுறைகள் போர் இல்லாது சமாதானமாக அனைவரும் ஒன்றாக வாழ வேண்டும். 

போர் இனவாத அரசியல்வாதிகளுக்கே தேவை எமக்கு தேவையில்லை. 

அரசியல்வாதிகளின் தலையீடு இல்லை எனில் திஸ்ஸ விகாரை பிரச்சனையை தீர்ப்போம் 

யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை பிரச்சனை இருக்கின்றது. அதனை இலகுவாக தீர்க்க முடியும். அதற்கு அந்த விகாரையை வைத்து வடக்கில் அரசியல் செய்பவர்கள் அதில் இருந்து விலக வேண்டும். அதேபோன்று தெற்கிலும் அந்த விகாரையை வைத்து அரசியல் செய்பவர்கள். அந்த அரசியலை கைவிட வேண்டும். 

அவ்வாறு அரசியல்வாதிகள் விகாரை பிரச்சனையில் இருந்து விலகுவார்களாக இருந்தால் எம்மால் அந்த பிரச்னையை மிக இலகுவாக தீர்க்க முடியும். 

விகாரை காணி உரிமையாளர்கள் , விகாரைக்குரிய விகாராதிபதி , நாக விகாரை விகாராதிபதி ஆகியோர் இணைந்து பேசி அதற்கு ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ள முடியும். 

நாட்டில் தொல்பொருள் எச்சங்கள் காணப்பட்டால் , அது தமிழா , சிங்களமா முஸ்லிமா , இந்துவா பௌத்தமா என பார்க்காது எமது நாட்டின் தொல்லியல் மரபு எமது பண்பாடு என ஒரு நாட்டு மக்களாக சிந்திக்க வேண்டும் 

ஆனால் இனவாதிகள் அப்படி பார்ப்பதில்லை. அதன் ஊடாக இனவாதத்தை தூண்ட முயல்கின்றனர். அப்படியான இனவாத குழுக்களை மக்கள் இனம் கண்டு , அவர்களை தோற்கடித்துள்ளார்கள். 

இனி அவர்கள் எந்த வேடம் அணிந்து வந்தாலும் அவர்கள் இனவாதிகள் என்பதனை மக்கள் இனம்கண்டு அவர்களை தோற்கடிப்பார்கள். அதேவேளை தேசிய மக்கள் சக்தியும் இனியும் இனவாதம் நாட்டில் தோண்ட இடமளிக்க மாட்டாது. 

யாழில் இருந்து புதிய அணி நாடாளுமன்றம் வந்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் பல பாரம்பரிய கட்சிகள் உள்ளன. கடந்த பொது தேர்தலில் அவற்றினை தவிர்த்து எமது கட்சியை சார்ந்த மூவரை தெரிவு செய்துள்ளீர்கள். புதிய ஒரு அணி யாழில் இருந்து நாடாளுமன்றம் வந்துள்ளது. 

யாழ்ப்பாண மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் வீணடிக்க மாட்டோம். இனவாதிகளுக்கு அஞ்சி மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாது இருக்கமாட்டோம். நாம் தேசிய ஒருமைப்பாட்டுக்காக என்றும் உழைப்போம். 

காணிகளை விடுவிப்போம். 

பாதுகாப்பு காரணங்களுக்கு என தமிழ் மக்களின் காணிகள் கையகப்படுத்தபட்டுள்ளது. அந்த காணிகளை பாதுகாப்பு தரப்பிடம் இருந்து மீள பெற்று காணி உரிமையாளர்களுக்கு கையளிப்போம். 

இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்றும் என்ற அச்சத்தில் கையகப்படுத்தப்பட்ட காணிகளை கடந்த அரசாங்கம் மீள கையளிக்கவில்லை. ஆனால் நாங்கள் இன்னொரு யுத்தம் நாட்டில் தோன்ற அனுமதிக்க மாட்டோம். அதனால் பாதுகாப்பு காரணங்களுக்கு என காணிகள் தேவையில்லை. விரைவில் காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்போம்.

மூடப்பட்ட வீதிகளையும் படிப்படியாக திறந்து மக்கள் பாவனைக்கு கையளிக்கிறோம். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் மூடப்பட்டு இருந்த வீதிகளை திறந்துள்ளோம். 

கொழும்பில் பாதுகாப்பு காரணமாக என மூடப்பட்ட வீதிகளை திறக்கும் போது ஏன் யாழ்ப்பாணத்தில் வீதிகளை திறக்க கூடாது. நாட்டில் பாதுகாப்பு காரணமாக என மூட்டப்பட்ட வீதிகளை திறப்போம் 

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என வெளிப்படுத்துவோம். 

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான தகவல்களையும் வெளிப்படுத்துவோம். அரசாங்கத்திடம் , பொலிசாரிடம் , இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்துவோம். 

ஒருவர் இறந்தால் அவருக்காக அழுது , அவருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை செய்து சில காலத்தில் ஆறுதல் அடைவோம். ஆனால காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது ? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா ? இல்லையா ? என்பது தெரியாமல் படும் வேதனைகளை நான் நன்கு அறிவேன். எனது சகோதரர் கூட காணாமல் ஆக்கப்பட்டவரே. அதனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வலி எனக்கு புரியும். 

எமக்கு அமைதி தேவை. அதற்காக அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டறிந்து வெளிப்படுத்துவோம். 

 நாங்கள் நாட்டை பொறுப்பெடுத்த காலம் முதல் நாட்டை வளப்படுத்தி வருகின்றோம். எதிர்வரும் 5 வருடத்தில் அந்நிய செலவாணியை அதிகரிப்போம்.

கைவிடப்பட்ட பல செயற்திட்டங்களை தற்போது மீள ஆரம்பித்துள்ளோம். 

பொலிஸ் முப்படைகளில் வேலை வாய்ப்பு 

அதேபோன்று பல வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளோம். குறிப்பாக தமிழ் இளையோர் 2 ஆயிரம் பேருக்கு பொலிஸ் திணைக்களத்தில் வேலை வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம். 

அதேபோன்று இராணுவம் , கடற்படை விமான படையிலும் தமிழ் இளையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம் அதற்கு இங்குள்ள பெரியவர்கள் பெற்றோர்கள் இளையோர்களை இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த எடுத்து கூற வேண்டும். 

காங்கேசன்துறையில் ஒரு ஜனாதிபதி மாளிகை உள்ளது. அது எமக்கு தேவையில்லை. அதனை யாழ்ப்பாண மக்களுக்கு பயன்பட கூடியவாறு மக்களுக்காக அதனை வழங்கவுள்ளோம் 

யாழ்ப்பாண பொது நூலகத்தை எரித்தார்கள். அது எமது இதயங்களை காயப்படுத்தி உள்ளது. நூலகம் எரிக்கப்பட்டது இனவாதத்தின் உச்சமாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதற்காகவே நூலகத்தை புனரமைக்க நிதி ஒதுக்கியுள்ளோம் 

நாட்டிற்கு சுற்றுலா பயணிகள் பெருமளவில் வருகின்றார்கள் அவர்கள் வடக்கு செல்வது குறைவாக உள்ளது. 

உள்ளூர் விமான சேவையை மேம்படுத்துவோம் 

அதனால் நாம் உள்ளூர் விமான சேவைகளை வலுப்படுத்த உள்ளோம். அதன் ஊடாக சுற்றுலா பயணிகளை வடக்குக்கு செல்ல வைக்க முடியும். 

வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அழகிய கடற்கரைகள் உள்ளன. அவற்றினை சுற்றுலா தளங்களாக மேம்படுத்துவோம் 

அதேவேளை யாழ்ப்பாணத்தய் அதன் பாரம்பரியம்  கலாச்சாரம் பண்பாடு ஆகியவற்றை பிரதிநிதித்துவ படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தை மீள கட்டி எழுப்புவோம் 

வடக்கு கடல் வளத்தை பாதுகாப்போம் 

வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்களை அழிக்க அனுமதிக்க மாட்டோம். அந்த கடல் வளங்களை நம்பி பெருமளவான கடற்தொழிலாளர்கள் உள்ள போது , அந்த வளங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அனுமதிக்க முடியாது. 

வடக்கு கடல் வளங்களை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதனை எடுங்கள் என கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளோம். 

புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்ப வர வேண்டும். 

வடக்கில் இருந்து பலர் புலம்பெயர் நாடுகளுக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் மீள நாட்டிற்கு வர வேண்டும். எமது நாட்டினை கட்டியொழுப்ப தங்கள் முதலீடுகளை நாட்டில் மேற்கொள்ள வேண்டும். 

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து நாட்டை கட்டியொழுப்ப நாட்டிற்கு வருகை தர வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். 

இந்த நாட்டில் கடந்த காலங்களில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டம் இல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் என சட்டங்கள் நடைமுறைப்படுத்துவதில் பாகுபாடு இருந்தது. இனிஅவ்வாறு இருக்காது. அனைவருக்கு சட்டம் பொதுவானதாக இருக்கும். 

முதலமைச்சர்கள் சிறைகளில் 

தற்போது வடமத்திய மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்கள் சிறையில் உள்ளனர். பல அமைச்சர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன. முன்னாள் ஜனாதிபதியின் இரு மகன்களுக்கு எதிராகவும் நீதிமன்றில் வழக்குகள் நடைபெறுகின்றன. 

குற்றம் செய்த யாரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாது. வெளியில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன 

நாம் ஒரு புது அத்தியாயத்தை தொடங்கியுள்ளோம். ஜனாதிபதி , நாடாளுமன்றில் அறுதி பெரும்பான்மை என்பன எங்கள் கைகளில் உண்டு ஆனால் கிராமத்தை கட்டியொழுப்ப எமக்கு மக்கள் ஆதரவு வேண்டும். 

உள்ளூர் சபைகளையும் எம்மிடம் தாருங்கள் 

பிரதேச சபைகளில் இருந்து வரும் முன் மொழிவுகளில் இருந்தே கிராமத்தை கட்டி எழுப்ப முடியும். பிரதேச சபைகள் நகர சபைகள் மாநகர சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி நடந்தால் அவர்களின் முன் மொழிவுகளை கண்களை மூடிக்கொண்டு ஏற்று அதற்கு நிதிகளை ஒதுக்குவோம் 

வேறு யாருடைய கைகளில் சபைகள் சென்றால் அவர்களின் முன் மொழிவுகளை பத்து தடவைகளுக்கு மேல் யோசனை செய்தே நிதி ஒதுக்குவோம். 

ஏனெனில் கடந்த காலங்களில் பல ஊழல்கள் இடம்பெறுள்ளன. ஆனால் தேசிய மக்கள் சக்தி ஊழலற்ற அரசாங்கம். மத்தியில் ஊழலற்ற அரசாங்கமாக காணப்படும் போது , கிராம அபிவிருத்திகளில் ஊழல் செய்ய முடியாது. 

எனவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள 17 சபைகளையும் எமக்கு தாருங்கள். 

கடந்த காலங்களில் தெற்கு மக்களை சந்தித்து அவர்கள் பிரச்சனை தொடர்பில் அறிந்து கொண்ட அளவுக்கு வடக்கு மக்களை நாம் சந்தித்து அவர்கள் பிரச்சனைகளை அறியவில்லை எனும் உண்மையை நாம் ஏற்றுக்கொள்கிறோம் 

ஆனால் வடக்கு மக்கள் எங்களை நம்பியுள்ளீர்கள். கடந்த பொது தேர்தலில் எங்கள் கைகளை பிடித்து பலப்படுத்தியுள்ளீர்கள்.  எந்த கைகளை மேலும் பலப்படுத்துங்கள். உங்கள் கைகளை நாம் இறுக பற்றிக்கொண்டுள்ளோம். 

உங்கள் பிரச்சனைகளை படிப்படியாக தீர்த்து வைத்து , நாட்டில் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம் என உறுதி அளிக்கிறேன் என தெரிவித்தார் 

No comments