பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு: பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பதவிநீக்கம்


வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவருடன் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் கான்ஸ்டபிள் ஒருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வெளிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல பகுதியில் கடந்த 1 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) வீடொன்றினுள் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து எம். சத்சரா நிமேஷ் என்னும் 26 வயது இளைஞனை கைது செய்திருந்தனர். 

பொலிஸ் தடுப்பு காவலில் இளைஞன்  மனநலக் கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பதைக் குறிக்கும் விதத்தில் நடந்து கொண்டதாகவும், பொலிஸ் நிலையத்தில் வைத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் நடந்துக் கொண்டுள்ளதுடன், அதிகாரிகளால் அவரை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அறைச் சுவரில் பல தடவை உடலை மோதிக் தன்னை தானே வருத்திக் கொண்டதாகவும், அதனை அடுத்து, இளைஞனை அங்கொடை மனநல மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இந்நிலையில்  மேற்படி சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவதற்காக வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மூவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


No comments