காசாவின் கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொள்ளலாம் - டொனால்ட் டிரம்ப்


காசாப் பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தபோதே அவர் இக்கருத்தை வெளியிட்டார்.

டிரம்ப் மீண்டும் பதவியேற்ற பிறகு வெள்ளை மாளிகைக்குச் சென்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் இவர்தான்.

காசா பகுதியின் உரிமையை அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் என்று  நெதன்யாகுவுடன் இணைந்த கூட்டுச் சந்தித்திப்பிலேயே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இக்கருத்தைக் கூறினார்.

காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும், நாங்களும் அதனுடன் இணைந்து செயல்படுவோம். நாங்களே அதை சொந்தமாக்கிக் கொள்வோம். மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து ஆபத்தான வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பாவோம் என்று டிரம்ப் கூறினார்.

காசாவை அபிவிருத்தி செய்வதாகவும், சவுதி அரேபியா அங்கு உதவியாக இருக்கும் என்றும் டிரம்ப் உறுதியளித்தார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் மீதான இஸ்ரேலிய இறையாண்மையை அங்கீகரிப்பது குறித்து வாஷிங்டன் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை என்றும், ஆனால் அடுத்த மாதத்தில் இந்த தலைப்பில் ஒரு அறிவிப்பை வெளியிடும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் சவுதி அரேபியாவுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார். இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான சமாதானம் சாத்தியமானது மட்டுமல்ல, அது நடக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று டிரம்ப் கூறினார்.

பாலஸ்தீனியர்களை காசாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்ற முடியும் என்று டிரம்ப் கூறினார். நீங்கள் இப்போது காசாவில் வசிக்க முடியாது. எங்களுக்கு வேறொரு இடம் தேவை என்று நான் நினைக்கிறேன். அது மக்களை மகிழ்விக்கும் இடமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று டிரம்ப் மேலும் கூறினார்.

காசாவிலிருந்து இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களை எகிப்து, ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுவது தொடர்பான திட்டத்தை டிரம்ப் முன்னர் முன்மொழிந்தார். அம்மான் மற்றும் கெய்ரோ இரண்டும் இந்த திட்டத்தை நிராகரித்துள்ளன என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

No comments