வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்களுக்கே முன்னுரிமை அளியுங்கள்
வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மாகாண உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், மாகாண உயர் அதிகாரிகளுடன் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் மாகாணப் பணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
குறித்த கலந்துரையாடலில் ஆளுநர் மேலும் கூறியதாவது:
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியில் தனி கவனம் செலுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் இரு மாகாணங்களிலும் விசேட அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை எமது மாகாணத்தின் வளர்ச்சிக்காக நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வடக்கு மாகாண சபையால் ஏற்கனவே 32 மிகப் பெரிய அளவிலான அபிவிருத்தித் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ளன. இத்திட்டங்களைத் தற்போதைய சூழல் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மீள் பரிசீலனை செய்து, உடனடியாகச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய திட்டங்களை வடிவமைக்கும் போதும், இருக்கும் திட்டங்களை மீளாய்வு செய்யும் போதும் சில விடயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
திட்டங்கள் மாகாணத்தின் பொருளாதாரத்தை உயர்த்தக் கூடியதாக இருக்க வேண்டும். எமது மாகாண இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களாக அவை அமைய வேண்டும். மாகாணத்தில் இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும் இயற்கை மற்றும் ஏனைய வளங்களைப் பயனுள்ள வகையில் கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். மாவட்ட ரீதியாக மக்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
'வெறுமனே கட்டடங்களைக் கட்டுவதை விட, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நீண்டகாலத் திட்டங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment