ஏப்ரல் தேர்தலில் அனுர தரப்பு நம்பிக்கை!

 




கூட்டுறவு தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இவ்வருடம் ஏப்ரலில் நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாவது அல்லது நான்காவது வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் உரையாற்றிய அமைச்சர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தல் சட்டத்தில் திருத்தச் சட்டமூலத்தை அனைத்துக் கட்சிகளும் இணைந்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

அதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் (திருத்த) சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஆட்சேபனை மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.

இதுவரை பகிரங்கமாக வெளியிடப்படாத இந்த உத்தரவு பாராளுமன்ற சபாநாயகருக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

முன்னதாக 2022ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தேர்தல் பொருளாதார நெருக்கடி காரணமாக 2023ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது, நீதிமன்றத் தீர்ப்புகளால் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் அண்மையில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments