பிரச்சாரங்கள் முடிந்தது:21ம் திகதி வாக்களிப்பு!
இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.
இக்காலத்திற்குப் பின்னர் எந்தவொரு தனி நபரோ அல்லது குழுக்களோ வேட்பாளர்களை பிரசாரம் செய்வது, ஊக்குவிப்பது போன்றன தேர்தல் சட்டங்களை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
‘நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்காக கடுமையான விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.
பிரச்சார காலம் முடிவடைந்தவுடன் பொது பேரணிகள், விளம்பர பொருட்கள் விநியோகம் அல்லது வீடு வீடாக பிரசாரம் செய்ய அனுமதிக்கப்படாது.
எந்தவொரு பிரச்சாரத்திற்கும் எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர தெரிவித்துள்ளார்.
இதனிடையே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 156 புதிய முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதோடு, மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 4,737 ஆக அதிகரித்துள்ளது.
ஜூலை 31 முதல் செப்டம்பர் 17 வரையிலான காலகட்டத்தில் மொத்தம் 4,737 வழக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மொத்த புகார்களில், தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மையத்துக்கு 1438, தேர்தல் புகார் மேலாண்மைக்கான மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவிற்கு 3299 புகார்கள் வந்துள்ளன. அனைத்து புகார்களும் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வடகிழக்கில் குறிப்பிடத்தக்க தேர்தல் வன்முறைகள் தொடர்பான பாரிய முறைப்பாடுகள் ஏதும் செய்யப்பட்டிருக்கவில்லை.
Post a Comment