தொடங்கியது மீண்டும் கப்பல் கதை!


தடைப்பட்டிருந்த கப்பல் சேவை மீண்டும் காங்கேசன்துறைக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறை துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கேதுவாக அந்தமானிலிருந்து நாகை வந்த சிவகங்கை கப்பல் நாகப்பட்டிணத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து பரீட்சார்த்த நடவடிக்கைகளின் பின்னர் பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை கடந்த மே மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகும் என கூறப்பட்ட நிலையில் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாம் 14 ஆம் திகதி பிரதமர் மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


கப்பல் சேவை நாளாந்தம் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில் சீரற்ற வானிலை மற்றும் போதியளவான பயணிகள் இன்மையால் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

அதன்பின்னர் கப்பல் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டதையடுத்து 13ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கப்பல், நாகைக்கு செல்வதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் தொழினுட்ப கோளாறு காரணமாக பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments