கையெல்லாம் நோட்டீஸ்:மீண்டும் களத்தில் முன்னணி!

 


நடைபெறப்போகும் ஜனாதிபதி தேர்தலினை புறக்கணிக்க கோரி விடுமுறை நாட்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி துண்டுபிரசுர விநியோகத்தில் குதித்துள்ளது.இன்றைய தினமும் ஊடகங்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டு கொக்குவில் பகுதியில் பகுதி நேர துண்டுபிர விநியோகம் முன்னணியால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ் பொது வேட்பாளர் விடயம் குறித்து தென்னிலங்கை அரசியல்வாதிகளிடமும் மற்றும் தமிழ் அரசியல்வாதிகளிடையேயும் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக தான் பிரச்சாரங்களில் முதன்மையாக நின்று செயற்படுவேன் என தெரிவித்துள்ளார்.

அதேவேளை காசுக்காக ஒரு தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எனினும் இதுவரை தமிழர் பிரதேசங்களுக்கு சென்று வாக்குகளை கோராத அரசியல்வாதிகள் தற்போது தமிழர்களை நாடுவதாகவும் பொது வேட்பாளர் என்ற கருப்பொருள் பிரதான வேட்பாளர்களிடத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் பொது வேர்ப்பாளரை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என பலர் கருத்து தெரிவிக்கின்ற நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது மக்களது வாக்குகளை கோரி நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுவரொட்டிகள் வடகிழக்கெங்கும் ஒட்டப்பட்டுவருகின்றது.

தென்னிலங்கை முன்னணி கட்சிகள் முதல் சுயேட்சை வேட்பாளர் வரை களமிறங்கும் தேர்தலில் வடகிழக்கு வாக்குக்கள் அனைவரது ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.


No comments