கூட்டமைப்பு - ஈபிடிபி எல்லோரும் ஒன்று:டக்ளஸ்!



நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது நண்பர்களான சக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அபிவிருத்தி நிதி வாங்கிய தமிழ்க் கட்சிகளின் எம்.பிக்கள் பலர் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவார்களா எனக் கேள்வி முன்வைக்கப்பட்டிருந்தது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியாகியவுடனே ரணில் விக்கிரமசிங்கவுக்கே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவோம் எனக் கூறிவிட்டோம்.

தற்போது அநேகமான தமிழ், சிங்கள, முஸ்லிம் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில் எனது சக நண்பர்களான தமிழ்க் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் என நம்புகின்றேன்.

சக தமிழ்க் கட்சிகள் மக்களுக்கான அபிவிருத்தியை மேற்கொள்வதற்காக பல கோடி ரூபாய்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியமை அனைவருக்கும் தெரிந்த விடயம்.

எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் சமதளத்தில் மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழ்க் கட்சிகளின் நம்பிக்கையை நான் வரவேற்கின்றேன்.

தமிழ்ப் பொது வேட்பாளர் விடயம் தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்மை பயத்தாலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்காது என்பது அதனை ஏற்படுத்தியவர்களுக்கு நன்கு தெரியும் எனவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


No comments