பங்களாதேஷ் போராட்டம் இதுவரை 105 பேர் பலி: அமுல்படுத்தப்பட்டது ஊரடங்கு!!


பங்களாதேஷில் இந்த வாரம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட மாணவர்களின் போராட்டங்களில் இதுவரை 105 பேர் கொல்லப்பட்டனர். 

இன்று சனிக்கிழமை மாணவர்கள் தலைமையிலான போராட்டங்களை அடக்குவதற்காக ஊரடங்கு உத்தரவை இராணுவம் அமுல்படுத்தத் தொடங்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை நீடிக்கும். அதன்பிறகு நிலைமையை மதிப்பிட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாக அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் அத்தியாவசியப் பொருட்களை் வாங்குவதற்கு அனுமதிக்கும் வகையில் மதியம் முதல் இரண்டு மணி நேரத்திற்கு இந்த நடவடிக்கை தற்காலிகமாக தளர்த்தப்பட்டது.

வீதிகளில் இராணுவத்தினர் சோதனைச் சாவடிகளை அமைந்து பல்வேறு சோதனைகளை நடத்திவருக்கிறனர். அடையாள அட்டைகளையும் பார்வையிடுகின்றனர்.

இணையம் மற்றும் செயலிகள் மீதான இடைநிறுத்த தடைகள்  வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை கூட அனைத்து கூட்டங்களும் தடை செய்யப்பட்டன, ஆனால் எதிர்ப்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடந்தன. போராட்டக்காரர்களை கலைக்க அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ஒலி குண்டுகளை வீசியும் உள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை போராட்டக்காரர்கள் சிறைக்குள் நுழைந்து 850 கைதிகைள விடுவித்தனர்.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை டாக்காவில் உள்ள அரசு ஒளிபரப்பு நிறுவனமான பங்களாதேஷ் தொலைக்காட்சியின் தலைமை அலுவலகத்தை எதிர்ப்பாளர்கள் தாக்கி தீ வைத்தனர்.

1971 இல் பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம் சுதந்திரம் பெற போராடியவர்களின் குடும்பங்களுக்கு 30% உட்பட, அரசு வேலைகளுக்கான இடஒதுக்கீடு முறையை நீதிமன்றம் மறுசீரமைத்த பின்னர் அமைதியின்மை ஏற்பட்டது.

பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவின் கீழ் உள்ள வங்காளதேச அரசாங்கம் 2018 இல் ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்தது. வேலை ஒதுக்கீட்டை மறுசீரமைப்பதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்துள்ளது மற்றும் உச்ச நீதிமன்றம் அதை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்துள்ளது, ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது.

 ஷேக் ஹசீனா இந்த ஆண்டு ஜனவரி மாதம் நான்காவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடுநிலையான தற்காலிக அரசாங்கம் தேர்தலுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆளும் அவாமி லீக் நிராகரித்ததை அடுத்து பல எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன.



No comments