ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உலங்கு வானூர்தி விபத்தில் பலி!


வடமேற்கு ஈரானில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் பலர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

ஈரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏவின் சமூக ஊடக சேனல்களில் ட்ரோன் காட்சிகள் பகிரப்பட்டுள்ளன, இது ஜனாதிபதி ரைசியின் உலங்கு வனூர்தியின் சிதைவைக் காட்டுகிறது.

கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள வர்சகான் மற்றும் ஜோல்பா நகரங்களுக்கு இடையில் அமைந்துள்ள டிஸ்மார் காட்டில் உலங்குவானூர்தி விபத்தில் ரைசியுடன் பல மூத்த ஈரானிய அதிகாரிகளும் கொல்லப்பட்டனர். மலைப்பகுதியில் எரிந்த பகுதியில் உலங்குவானூர்தியின் வால் போல் தெரிகிறது. அந்த இடத்தில் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

ஹெலிகாப்டர் விபத்தில் பலியானவர்களில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

ஈரான் அதிபரின் பாதுகாப்புப் பிரிவின் தளபதி சர்தார் செயிட் மெஹ்தி மௌசவியும் கொல்லப்பட்டார், மேலும் பல மெய்க்காவலர்கள் மற்றும் உலங்குவானூர்தியின்  வானோடிகள் எனப் பலரும் கொல்லப்பட்டனர்.

ரஷ்யா , அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா உட்பட பல நாடுகள் மீட்பு பணிக்கு உதவி வழங்க முன்வந்தன . துருக்கியும் ஈரானுக்கு மலை மீட்புக் குழுவை அனுப்பியது.

அஞ்சலி செலுத்திய முதல் வெளிநாட்டு தலைவர்களில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர், அவரது மரணம் மிகுந்த வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாகக் கூறினார்.

No comments