சட்டம்:வடக்கில் ஒன்று கிழக்கில் இன்னொன்று!



வடக்கில் மே18 இன அழிப்பு நாளிற்கான நினைவேந்தல்கள் முனைப்பு பெற்றுள்ள போதும் கிழக்கில் நெருக்கடி நிலை தொடர்கின்றது.

வடக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஊர்திகள் நாள் தோறும் பயணித்துவருகின்ற போதும் தடைகள் ஏதுமற்ற சூழலே காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாளான செவ்வாய்க்கிழமை (14) முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு பல பிரதேசங்களிலும் எழுச்சி பூர்வமாக இடம் பெற்றுவருகின்றது.

இதனிடையே அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பாண்டிருப்பு  பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி  தயாரிக்க முற்பட்டவர்கள் இலங்கை காவல்துறையால் தடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துசானந்தன், காணாமல்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி,  ஆகியோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு  நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன்  ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம்  பொதுமக்களுடன் இணைந்து  முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.

எனினும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவல்துறையினர் கல்முனை நீதிவான்  நீதிமன்ற தடை உத்தரவை காண்பித்து  முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களை நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்துள்ள  நிகழ்வினை   நிறுத்தியுள்ளனர்.

ஏற்கனவே திருமலையில் பிணையில் செல்லமுடியாதவாறாக கைதான பெண்கள் மூவர் உள்ளிட்ட நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற தடையினை மீறி முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியதாக தெரிவித்தே இரவு நேரம் சர்ச்சைக்குரிய வகையில் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments