துணைவேந்தருக்கு அழகல்ல:முரளி வல்லிபுரநாதன்!



இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தர்ம தேவதையென யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராசா தெரிவித்துள்ள கருத்துக்கள் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

1989 ம் ஆண்டு பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் ஆயுதக் குழுக்களின் தலையீட்டினால் பதவி நீங்கியதை தொடர்ந்து, தொடர்ச்சியாக உபவேந்தர் நியமனத்திலும் பல்கலைக்கழக நிர்வாக சபையான  மூதவை உறுப்பினர்கள் நியமனத்திலும்  பல்கலைக்கழக வாசனையே அறியாத ஆயுதக் குழுக்களும் அரசியல்வாதிகளும் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.

ஆத்தோடு,பல சந்தர்ப்பங்களில் பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதை அறியாத நபர்களையும் போதைப்பொருள் வியாபாரிகளையும் மூதவைக்கு நியமித்து வந்திருக்கின்றன என குற்றஞ்சாட்டியுள்ளார் சமுதாய மருத்துவநிபுணர் முரளி வல்லிபுரநாதன்.

துரதிட்டவசமாக உபவேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியின் கைகளில் இருப்பதனால் கடந்த காலங்களில் தென்பகுதி உபவேந்தர்கள் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசி பெறும் அவலத்தையும், அரசியல்வாதிகளுக்கு சார்பாகக் கேவலமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டதையும் அவதானித்தோம்.

இந்தப் பின்புலத்தில், தர்மதேவதை பற்றிப் பல்கலைக்கழகத்தின் அதி உயர் பதவியில் இருக்கும் பேராசிரியர் சிறீசற்குணராசா தெரிவித்த ஒரு கருத்து இந்துக்களையும் மனித உரிமைக்காக குரல் கொடுப்பவர்களையும் வேதனைப்படுத்தி உள்ளது.

இந்திய ஊடகங்களில் வெளிப்படுத்தப்பட்ட கொலை வழக்கு விபரங்கள் மற்றும் விக்கிலீக்ஸ் மூலம் வெளிப்படுத்தப்பட்ட ஒட்டுக் குழுக்களின் கொலை, கடத்தி சென்று கப்பம் கோருதல், மற்றும் அபலைத் தமிழ் பெண்களை  விபச்சாரத்துக்கு உட்படுத்துதல் போன்ற பல அதர்ம செயல்களை கடந்த 4 தசாப்தங்களாக அனுபவித்து வந்திருக்கிறோம்.

சுருக்கமாக சொல்வதானால் ஆயுதப் படையினரினால் இழைக்கப்பட்ட அதர்மங்களை விட ஒட்டுக்குழுக்களின் அதர்மச் செயல்கள் மிகவும் கொடுமையாக இருந்திருக்கிறது.

அரசியல்வாதிகளுக்கு மண்டியிடாமல் அவர்களின் துதி பாடுவதை நிறுத்தி அரசியலுக்கு அப்பால் தமிழ் இனத்தின் மேன்மைக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் செயல்படுமாறு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராசாவை முரளி வல்லிபுரநாதன் கோரியுள்ளார்.


No comments