துயிலுமில்ல வளைவை அகற்றினால் இனமுரண்பாடு!



முழங்காவில் மாவீரர் துயிலுமில்ல நுழைவாயிலில் உள்ள வளைவுகளை அகற்றுவதென தீர்மானிக்கப்பட்டால் அம்முயற்சி தற்போதைய சூழலில் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கலாமென பூநகரி பிரதேசசபை தவிசாளர் நீதிமன்றில்  தெரிவித்துள்ளார்.

பூநகரி பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தற்போது முழங்காவில் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக பேணப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தை முன்னிட்டு குடும்பங்களால் தற்காலிக வளைவு ஒன்று துயிலுமில்ல நுழைவாயிலில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் வளைவினை அகற்றுமாறு முழங்காவில் காவல்துறை பொறுப்பதிகாரி அழுத்தங்களை பிரயோகித்துவருகின்றார்.

இலங்கை முப்படைகளதும் காவல்துறையினரதும் சட்டவிரோத கட்டடங்கள் பலவும் குவிந்துள்ள நிலையில் சாதாரண வளைவு எத்தகைய நெருக்கடியை தருகின்றதென சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் குறித்த வளைவை அகற்ற பூநகரி பிரதேசசபை செயலாளருக்கு பணிப்பு விடுக்குமாறு கோரி முழங்காவில் காவல்நிலைய பொறுப்பதிகாரி நீதிமன்றை நாடியுள்ளார். 

இதனையடுத்து இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் ஆஜராகிய பூநகரி பிரதேசசபை செயலாளர் துயிலுமில்ல நுழைவாயிலில் உள்ள வளைவுகளை அகற்றுவதென தீர்மானிக்கப்பட்டால் அம்முயற்சி தற்போதைய சூழலில் இன முரண்பாடுகளை தோற்றுவிக்கலாமென தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அங்கு பிரதேசசபை செயலாளருக்கு ஆதரவாக ஆஜரான பத்திற்கும் அதிகமான சட்டத்தரணிகள் வடகிழக்கில் முப்படைகள் மற்றும் காவல்துறையால் அமைக்கப்பட்டு பேணப்படும் சட்டவிரோத கட்டடங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்நிலையில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற ஏதுவாக விசாரணையினை மே 16ம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிபதி பணித்துள்ளார்.


No comments