மனோவா? வேலன் சுவாமிகளா? பொருத்தம்!
நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களது வாக்குகளை பெற பொருத்தமான பொது வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசனேயென ஈழம் சிவசேனை தலைவர் மறவன்புலோ சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவதாக இருந்தால் அதற்கு வேலன் சுவாமிகள் தகுதியானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால், தமிழர் வாக்குகளைப் பிரிக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்துள்ள சி.வி.விக்கினேஸ்வரன் இதுவரை காலமும் பெரும்பான்மையின வேட்பாளர்களுக்கு வாக்களித்த அனைத்துத் தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பது பொருத்தமானதாகும்.
தமிழர்களாகிய நாம் இதுவரையில் பெரும்பான்மையின சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களித்திருக்கின்றோம். அவர்கள் அனைவரும் எமது அரசியல் பிரச்சினைக்குத் தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்தனர்.ஆனால், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் அவர்களுக்கு எம்மைத் தெரியவே இல்லை. அவர்கள் வெகு இலகுவாக எம்மைப் புறக்கணித்துவிட்டனர்.
நாங்கள் 1956ஆம் ஆண்டு எங்கே இருந்தோமோ, இப்போதும் அங்கேயே இருக்கின்றோம். வடக்கு - கிழக்கு தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு வழங்கப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்னிணயில் வடக்கு - கிழக்கு வாழ் தமிழ்பேசும் மக்களின் சார்பில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறங்கினால் அவர் ஜனாதிபதியாக தெரிவாக மாட்டார் என்பது உண்மையே.
தமிழ் பொது வேட்பாளரொருவரைக் களமிறக்குவது தமிழர்களின் வாக்குகளைப் பிளவுபடுத்தும் என்ற தர்க்கம் முன்வைக்கப்படுகின்றது.
ஆனால், மிகப்பொருத்தமான தமிழ் வேட்பாளரொருவர் களமிறக்கப்பட்டால், தமிழ் மக்கள் அனைவரும் பெரும்பான்மையின வேட்பாளருக்கு வாக்களிப்பதற்குப் பதிலாக, அந்தத் தமிழ் பொதுவேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். தமிழர்கள் மிக நீண்டகாலமாக ஏமாற்றப்பட்டிருக்கின்றார்கள்.
எனவே , இதுவரை காலமும் பெரும்பான்மை அரசியல்வாதிகளால் தமிழ் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பதற்கு இது மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பமாகும்.
அதிகாரம் மிக்க இடத்திலிருந்து தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பதற்குத் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவது மிக முக்கியமானதாகும்” என தெரிவித்துள்ளார்.
Post a Comment