பாய்ந்து பாய்ந்து தாக்கினார் டக்ளஸ்!



பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் தாக்குதல் மேற்காண்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வு நடவடிக்கையின் ஆரம்ப கட்டமாக இன்று(05) பகல் ஒரு மணியளவில் கனிய வளத்திணைக்களத்தினால் அளவீடுகள் மேற்கொள்ளும் பணிகளை முன்னெடுக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்காக கனியவளத்திணைக்களம் உட்பட 11 திணைக்களங்கள் பொன்னாவெளி கிராமத்தில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளவுள்ள இடத்திற்கு சென்றிருந்த போது அங்கு சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வரும் பொது மக்கள் அளவீட்டு பணிகளுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
போராட்ட இடத்திற்கு ஆறு பஸ்களில் வெளிப் பிரதேசங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்களுடன் சென்ற கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள் போராட்டத்தில் முன்வரிசையில் நின்றவர் மீது பாய்ந்து தாக்குதல் நடத்த்தியுள்ளார்.
இதனால் அங்கு பதற்றமான நிலைமை உருவாகியது எனவும் கிளிநொச்சி, மன்னார்,யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இருந்து ஆறு பஸ்களில் அழைத்து வரப்பட்ட பொது மக்களை கொண்டு பொன்னாவெளி மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளும் கம்பனிக்கு ஆதரவாக கடற்றொழில் அமைச்சர் ஈடுப்பட்டார் என போராட்டத்தில் கலந்துகொண்ட பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட மக்கள் கூட்டத்தை காட்டி சுண்ணக்கல் அகழ்வின ஆரம்ப பணிகள் பெருமளவு மக்களின் ஆதரவுடன் நடந்துள்ளது என்ற தோற்றப்பாட்டை உருவாக்கவும் அமைச்சர் இதனை மேற்கொண்டார் என்றும் பொன்னாவெளி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் தாம் பஸ்களில் அழைத்து வரப்பட்டவர்களிடம் சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிரான எமது போராட்டத்தை பற்றி தெளிவுப்படுத்திய போது அவர்கள் அங்கிருந்து விலகி சென்றுவிட்டனர் எனவும் பொன்னாவெளி மக்கள் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மத்திய பேரூந்து நிலையத்தில் வியாபார நிலையங்கள் பெற்றவர்கள், கடலட்டை பண்ணைகளை பெற்றவர்கள் என அமைச்சரிடம் நன்மை பெற்றவர்களே வெளிப் பிரதேசங்களில் வருகை தந்தவர்கள் என்றும் தாம் கூட்டம் ஒன்றுக்கு வருமாறே தாம் அழைத்து வரப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர் என பொன்னாவெளி மக்கள் மேலும் தெரிவித்தனர்.
இருப்பினும் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள சென்றிருந்த கனியவளத் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் மற்றும் அமைச்சரின் குழுவினரை நடவடிக்கைகளை மேற்கொள்ளவிடாது தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டனர் பொன்னாவெளி பொது மக்கள்

No comments