மூன்றரை மணி நேர விசாரணையின் பின் விடுதலை


இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன் றொபேர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூவரும் இன்றைய தினம் புதன்கிழமை மதியம்  இலங்கையை வந்தடைந்த நிலையில் , கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு சுமார் மூன்றரை மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட மூவரும் தமது சொந்த இடங்களான கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் திரும்பவுள்ளனர்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் 07 பேர் 33 வருடங்களின் பின்னர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்களில் மூவர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால் , அவர்கள் அவர்களின் உறவினர்களுடன் இணைக்கப்பட்டனர். ஏனைய நால்வர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். அவர்கள் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால்  திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒன்றை வருட காலமாக சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நால்வரில் சாந்தன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார்.

எஞ்சிய மூவரையும் உயிருடன், உறவினர்களிடம் கையளிக்க வேண்டும் என இந்திய அரசுக்கு அழுத்தங்கள் ஏற்பட்டமையால்,   மூவரையும் இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்  இன்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்களிடம் செல்வதற்கு ஏதுவாக சகல நாட்டிற்குமான கடவுசீட்டினை வழங்குமாறு மூவரும் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் , இலங்கை செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டு , இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

No comments