வெடுக்குநாறிமலையில் வழிபாடு மறுப்பும் மணலாறை சிங்கள உரிமையாக்குவதும் வடக்கையும் கிழக்கையும் முழுமையாக தொல்பொருள் நிலமாக்கும் இலக்கா? பனங்காட்டான்


இந்துக்களின் வழிபாட்டுக்குரிய வெடுக்குநாறிமலையை தொல்பொருள் மரபுரிமை சிங்கள பௌத்த மயமாக்குவதும், மணலாறில் அரச குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களவர்களுக்கு காணி உரிமையை வழங்கி அதன் சொந்தக்காரர்கள் ஆக்குவதும் தமிழ் மண்ணைப் பட்டப்பகலில் கபளீகரம் செய்யும் முன்னெடுப்பு. காலப்போக்கில் வடக்கையும் கிழக்கையும் முழுமையாக தொல்பொருள் நிலமாக்கும் இலக்கை செயற்படுத்த ஷரணில் அன்ட் கோ| திட்டமிட்டு செயற்படுத்தினாலும் கேட்பதற்கு தமிழர் தரப்பில் யாருளர்? 

வெடுக்குநாறி மலையிலுள்ள சிவலிங்கத்தை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டு பூசை நடத்தச் சென்றவர்களில் எண்மரை கைது செய்த காவற்துறையினர் அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாதிருந்த நிலையில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது. 

சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனை அல்லது அறிவுறுத்தலின் பேரிலேயே நீதிமன்றம் இவர்களை விடுதலை செய்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், இலங்கையின் நாடாளுமன்றத்திலுள்ள சிலரால் இதனைப் பொறுக்க முடியவில்லை. 

சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான காவற்துறை அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் கோதபாயவின் வியத்கம குழுவின் முக்கியஸ்தரும் கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான சரத் வீரசேகர ஆகிய இருவரும் முடிந்தளவுக்கு இதனை தமது கைகளில் எடுத்து ஷபொரிந்து| தள்ளியுள்ளனர். அதாவது, தமிழ் மக்களை மிக மோசமாக அச்சுறுத்தியுள்ளனர். நாடாளுமன்றம் தங்களுக்கு வழங்கியுள்ள பேச்சு பாதுகாப்பு உரிமையைப் பயன்;படுத்தி இவர்களின் பயமுறுத்தல் எச்சரிக்கை அமைந்துள்ளது. 

வெடுக்குநாறி மலையில் கோயில் எதுவும் இல்லை என்ற அமைச்சர்; டிலான் அலஸின் கூற்று ஊடகங்களில் பிரபல்யமாக வந்துள்ளது. அதுபோன்று, ஷவெள்ளவத்தை கோயிலை இடித்து பௌத்த வழிபாட்டில் ஈடுபட முடியுமா?| என்ற கேள்வியை மறைமுக அர்த்தத்தில் சரத் வீரசேகர வீசியுள்ளார். 

இங்கு முதலில் கவனிக்க வேண்டியது சட்டம் ஒழுங்கைக் கவனிக்கும் பொலிஸ் திணைக்களத்துக்குப் பொறுப்பான டிரான் அலஸின் உரையையே. இந்த அமைச்சுப் பதவியை ஏற்ற நாளிலிருந்து இவரின் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் பல விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கியமாக தமக்கு நெருக்கமான தேசபந்து தென்னக்கோனை ஜனாதிபதி ரணிலை வலியுறுத்தி பொலிஸ் மாஅதிபராக நியமித்தது, போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பது என்ற பெயரில் தெற்கில் நாளாந்தம் இடம்பெறும் கொலைகள் என்பது பற்றி மாறுபட்ட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 

எதற்கெடுத்தாலும் எச்சரிக்கை விடுவதையே தமது பாணியாக மேற்கொண்டு வரும் இவர் தம்மை அதிஉத்தம சிங்கள பௌத்தராக வெளிப்படுத்த முனைந்து வருகிறார். இவ்விடத்தில் இவரது பின்னணியை சற்று நோக்க வேண்டும். 1967ம் ஆண்டு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் ஸ்தாபக அதிபராக பதவியேற்ற ஆர்.ஐ.ரி.அலஸ் அவர்களின் மூன்று புதல்வர்களில் மூத்தவர் இவர். 1980களில் கல்வி அமைச்சராகவிருந்த ரணில் விக்கிரமிங்கவுக்கும், அதிபர் ஆர்.ஐ.ரி.அலஸிற்கும் இடையில் வெளிவராத முரண் ஏற்பட்டதால் 1982ல் இவரை அப்பாடசாலையிலிருந்து அதிரடியாக ரணில் இடமாற்றம் செய்தார். 

அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன மற்றும் சில அமைச்சர்கள் தலையிட்டும் இடமாற்றத்தை ரத்துச் செய்ய ரணில் இடம் கொடுக்கவில்லை. 1989ல் ஜனாதிபதியான பிரேமதாச ஆர்.ஐ.ரி.அலஸ் அவர்களை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் அதிபராக மீண்டும் நியமனம் செய்தார். 

ஆர்.ஐ.ரி.அலஸ் செட்டி சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அப்போது பலராலும் அறியப்பட்டவர். இவர் முன்னர் றோயல் கல்லூரியில் ஆசிரியராக இருந்தபோது அவரது மாணவராக இருந்த ரணிலுடன் ஒத்துப்போகாத காரணத்தினாலேயே அவரை பழிவாங்கும் நோக்குடன் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியிலிருந்து ரணில் வெளியேற்றியதாகவும் அப்போது சொல்லப்பட்டது. 

இன்று ரணிலின் ஆட்சியில் அந்த அதிபரின் புதல்வரான டிரான் அலஸ் தம்மி~;டப்படி இயங்கி இனநல்லுறவை சீரழிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். இவரையே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடுவதற்கான செயற்பாட்டுக் குழு தலைவராக ரணில் நியமித்திருக்கிறார். இந்த வகையில் தமது இடத்தை தக்க வைத்துக் கொள்ள சிங்கள பௌத்தத்தின் காவலராக அமைச்சர் டிரான் அலஸ் தம்மை காட்டிக் கொள்ள முனைவதாக ஆட்சித்தரப்பில் கருத்து நிலவுகிறது. 

வெடுக்குநாறிமலை விடயம் தொடர்பாக டிரான் அலஸ் மூன்று அம்சங்களைக் குறிப்பிட்டதை ஈழநாடு பத்திரிகை இந்த மாதம் 22ம் திகதிய இதழின் முதற்பக்கத்தில் தெரிவித்துள்ளது. பௌத்தத்துக்கு இடையூறு செய்தால் கைதுகள் தொடரும், வெடுக்குநாறி பௌத்த தலம் அனுரதபுர யுகத்துக்கு உரியது, 2023ல் இங்கு சிவலிங்கம் பிரதி~;டை செய்யப்பட்டதால்தான் பிரச்சனையானது என்பவை இவரது கூற்றுகள். 

இதற்கான அடிப்படை, இந்த இடம் தொல்பொருள் திணைக்களத்தின் பௌத்த மரபுரிமையைக் கொண்டதென இவர் நிலைநாட்ட முயற்சிப்பதானது. பௌத்த மத மரபுரிமைகள் உள்ள பகுதியில் பிறிதொரு தரப்பினர் மத வழிபாடுகளை முன்னெடுத்தால் முரண்பாடுகள் வரும் என்ற இவரது எச்சரிக்கை நிகழ்காலத்துக்கு மட்டுமன்றி எதிர்காலத்துக்குமானது. அதேசமயம் 2023ல் வெடுக்குநாறிமலையில் சட்டவிரோதமான முறையில் சிவலிங்க் பிரதி~;டை செய்யப்பட்டதால்தான் பிரச்சனை தோன்றம் பெற்றது என்றும் இவர் விளக்கியுள்ளார். 

ஆனால், சரத் வீரசேகர வேறு கதை சொல்கிறார். வெடுக்குநாறிமலையிலிருந்த பழைமையான பௌத்த தூபி இடித்தழிக்கப்பட்டு அதன்மீது சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது என்பது இவரது (கண்டுபிடிப்பு) குற்றச்சாட்டு. இலங்கையின் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவி வகிக்கும் இவரின் கூற்று, அமைச்சர் டிரான் அலஸ் சொல்வதற்கு மாறானது. அப்பட்டமான பொய்களை அவிட்டுவிட்டு சிங்கள பௌத்தர்களை உசுப்பி தமிழருக்கு எதிராக எழுச்சி கொள்ளச் செய்யும் நோக்கம் கொண்டது சரத் வீரசேகரவின் குற்றச்சாட்டு. 

அது மட்டுமன்றி, தேவையற்ற விதத்தில் வெள்ளவத்தை (பிள்ளையார்) கோயிலை வெடுக்குநாறிமலையுடன் இணைத்து, இந்தக் கோயில் மீதும் அராஜகம் புரிய வைக்கும் நோக்கில் கருத்து வெளியிட்டுள்ளார். இந்தக் கோயிலை இடித்து பௌத்த வழிபாடுகளில் ஈடுபட முடியுமா என்ற இவரது கேள்வி வேறு உள்ளர்த்தம் கொண்டது. 

'இந்தக் கோயிலை ஏன் இடிக்கக்கூடாது" என்ற தீய சிந்தனையை எவராவது ஒருவரின் காதில் போட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இவர் இருப்பது தெரிகிறது. 

1983ம் ஆண்டு யூலை இனஅழிப்புக்கு சில நாட்களுக்கு முன்னர் லண்டன் ரெலிகிராப் பத்திரிகைக்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன வழங்கிய செவ்வியில், யாழ்ப்பாண தமிழரை பட்டினி போட்டால் சிங்களவர் சந்தோசப்படுவர் என்றும், தமிழர்கள் பற்றி தமக்கு அக்கறை கிடையாதென்றும் கூறியவைகளே அந்த இனஅழிப்புக்கு விதையானது என்பதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இப்போது டிரான் அலஸ், சரத் வீரசேகர ஆகியோர் அதனையே செய்வதற்கு முற்படுகின்றனர் போலவே தெரிகின்றது. தமிழர்கள் தங்கள் வழிபாட்டுக்குச் செல்லும் அனைத்து இடங்களையும் தொல்பொருள் பௌத்த மரபுரிமை இடங்கள் என்று கூறி தடைபோடுவது அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடருமானால் தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் தொல்பொருள் மரபுரிமைக்கு உட்படுத்துவது அரசாங்கத்துக்கு சிரமமானதல்ல. 

தமிழர் தங்கள் சொந்தப் பணத்தில் காணிகளை வாங்கி தங்கள் மனஅமைதிக்காகவும் வழிபாட்டுக்காகவும் நிர்மாணித்து வரும் ஆலயங்களை அரசாங்க நிதியில் கட்டப்படும் பௌத்த வழிபாட்டுத் தலங்களுடன் ஒப்பிடக்கூடாது என்பதுகூட தெரியாதவர்களாக(?) சிங்கள அரசியல்வாதிகள் இருப்பதும், அவர்களின் போக்கை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களின் தலைவர்கள் இருப்பதும் தொடருமானால், இன்னொரு இனசங்காரத்துக்கு அவர்கள் நீர் ஊற்றுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். 

இந்தப் போக்குக்கு ஒத்தாசை வழங்குவது போன்று ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய செயற்பாடுகள் காணப்படுகின்றன. ஷஉறுமய| என்ற சிங்களப் பெயர் கொண்ட புதிய திட்டமொன்றின் கீழ் 20 லட்சம் பேருக்கு காணி உரிமம் வழங்கும் திட்டமொன்றை இவர் ஆரம்பித்துள்ளார். வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டது இந்தத் திட்டம். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் ராணுவ வசமுள்ள 234 ஏக்கர் காணியை விடுவிக்கும் நிகழ்ச்சிக்காக அங்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க, சமவேளையில் உறுமய திட்டத்தையும் அரங்கேற்றியுள்ளார். இதன்போது 408 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை கையளித்துள்ளார். இந்த உரிமைப் பத்திரம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் பெரும்பான்மையினர். இதிலும் முக்கியமானவர்கள் மணலாறு பிரதேசத்தில் குடியேற்றப்பட்டவர்கள். 

மணலாறு, நாயாறு என்ற பெயர் கொண்ட பிரதேசங்கள் வடக்கின் எல்லைப் பகுதிகள் மட்டுமன்றி வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தொடுபிரதேசங்களும்கூட. கொழும்பில் வாழ்ந்த செல்வந்தர்களான சில தமிழர் (செனட்டர் நீதிராஜா, சினிமாஸ் குணரட்ணம் உட்பட்ட பலர்) 1960களின் பிற்பகுதியில் இங்கு விவசாயப் பண்ணைகளை ஆரம்பித்து பல தமிழ்க் குடும்பங்களுக்கு வீடமைத்துக் கொடுத்து வாழ்வளித்து வந்தனர். சிங்கள ராணுவ மேற்பார்வையில் இக்குடியானவர்கள் அடித்துத் துரத்தப்பட்டும், கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டனர். மண்ணைப் பிடித்த ராணுவம் மணலாறை வெலிஓயா எனப் பெயர் மாற்றியது. மணல்(வெலி) ஆறு (ஓயா) என்பது சுத்த தமிழ்ப் பெயரின் சிங்கள மாற்றுப்பெயர். 

இங்கு குடியேற்றப்பட்டவர்களில் பலரும் சிங்கள சிறைக்கைதிகள், பயங்கர குற்றவாளிகளின் குடும்பத்தினர் என்பது அப்போது வெளிவந்த தகவல். முல்லைத்தீவு மாவட்ட நிர்வாகத்திலிருந்த இப்பிரதேசத்தை சிங்கள மயமாக்கவதற்காக அனுராதபுர மாவட்டத்தின் கீழ் அரசாங்கம் மாற்றியது. இதனோடு இணைந்ததாக ராணுவ அதிகாரியின் பெயரிலான ஜனகபுர உருவாக்கப்பட்டது. 

மணலாறை நிரந்தரமான சிங்களப் பிரதேசமாக்க அங்கு குடியேற்றப்பட்டவர்களுக்கு யாழ்ப்பாண வைபவத்தில் வைத்து காணி உரிமையை வழங்கிய ரணில் விக்கிரமசிங்க, அத்துடன் நிறுத்தாது 'எந்த இனத்தைச் சேர்ந்தவராயினும் அவர்களுக்கு காணி உரிமை கிடைக்க வேண்டும்" என்று தெரிவித்தது, தமிழர் பிரதேசங்களில் சிங்களவர் குடியேற்றப்படுவதையும் காணிகள் நிரந்தரமாக்கப்படுவதையும் தமது அரசின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளதை பகிரங்கப்படுத்தியதாகும். 

இந்துக்களின் வழிபாட்டுக்குரிய வெடுக்குநாறிமலையை தொல்பொருள் மரபுரிமை சிங்கள பௌத்த மயமாக்குவதும், மணலாறில் அரச குடியேற்றம் செய்யப்பட்ட சிங்களவர்களுக்கு காணி உரிமையை வழங்கி அதன் சொந்தக்காரர்கள் ஆக்குவதும் தமிழ் மண்ணைப் பட்டப்பகலில் கபளீகரம் செய்யும் முன்னெடுப்பு. காலப்போக்கில் வடக்கையும் கிழக்கையும் முழுமையாக தொல்பொருள் நிலமாக்கும் இலக்கை செயற்படுத்த ஷரணில் அன்ட் கோ| திட்டமிட்டு செயற்படுத்தினாலும் கேட்பதற்கு தமிழர் தரப்பில் யாருளர்? 

No comments