மக்களுடனா? தூக்கியடிக்கப்பட்ட மதகுரு!

 



பூநகரியின் கிராஞ்சிப்பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கான சுண்ணக்கல் அகழ்விற்கு எதிராக உள்ளுர் மக்களுடன் திரண்டு போராடிய கத்தோலிக்க மதகுரு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண ஆயர் ஊடாக தன்னை வெளியேற்ற முற்படுவதாக பகிரங்கமாகவே குறித்த  மதகுரு ஊடகங்கள் முன்னிலையில் அண்மையில் தெரிவித்திருந்தார்.

பூநகரியின் வலைப்பாடு பங்கு தந்தையாக இருந்த கத்தோலிக்க மதகுருவே தற்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

எனினும் தீவகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட வணபிதா ஜிம்பிறவுண் அடிகளாரை போன்றதொரு சூழல் ஏற்படுவதை தவிர்க்கவே யாழ்ப்பாணத்திற்கு மதகுரு மாற்றப்பட்டதாக அவரது நெருங்கிய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இறுதியாக பாலைதீவு புனித அந்தோனியார் உற்சவத்தில் பங்கெடுத்த நிலையில் தனது பதவியிலிருந்து அவர் வெளியேறியிருந்தார்.

இதனிடையே பொன்னாவெளி பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள சுண்ணக்கல் அகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கிராமமான பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து உற்பத்திக்கு தேவையான சுண்ணக்கல்லை அகழ்வது தொடர்பான ஆய்வுகள் கடந்த ஆண்டுகளில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அயல் கிராமங்களான கிராஞ்சி வலைப்பாடு வேரவில் ஆகிய பகுதிகளில் மக்கள் வாழ முடியாத ஒரு சூழல் ஏற்படுமென தெரிவித்தே அப்பகுதியை சேர்ந்த ஜந்து கிராம மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.


No comments