வெடுக்குநாறி:நல்லூரிலும் கவனயீர்ப்பு!
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட எண்மரையும் விடுதலை செய்ய வலியுறுத்தியும் சிவராத்திரி வழிபாட்டினை தடுத்தமையினை கண்டித்தும் நல்லூரில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஆதீனங்கள் மற்றும் கிறீஸ்தவ மத தலைவர்கள்,அரசியல் பிரதிநிதிகள் என நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நல்லை ஆதீனத்தின் முன்னதாக இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
நேற்றைய தினம் மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதனிடையே வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருகின்றனர்.
மகா சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது இலங்கை காவல்துறை தாக்குதல் மேற்கொண்டதாக நீதிமன்றின் கவனத்திற்கு சட்டத்தரணிகள் கடந்த சனிக்கிழமை கொண்டு வந்திருந்தனர். இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை (10) குறித்த 8 பேரையும் மன்றின் உத்தரவுக்கமைய வவுனியா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அழைத்து சென்றிருந்தனர்.
அதன்போது குறித்த 8 பேரினதும் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர்களை வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைவிலங்குடன் அவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Post a Comment