யாழிலிருந்து முன்னணியின் பேரணி வவுனியாவுக்கு!
வவுனியாவில் வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இலங்கை காவல்துறையின் அராஜகத்திற்கு எதிராகவும் தமிழருக்கான நீதிகோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று காவல்துறை மேற்கொண்ட அத்துமீறலை அடுத்து கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் நீதி கோரியே வவுனியாவில் இன்று பொதுமக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்ட போராட்டம் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு அருகில் ஆரம்பமான நிலையில், நெடுங்கேணி காவல் நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றிருந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த மண் எங்களின் சொந்த மண், காவல்துறை அராஜகம் ஒழிக மற்றும் தமிழர் தாயகத்தில் பௌத்தமயமாக்கலை நிறுத்து போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதேவேளை, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக வடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்கள்,மதத்தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் போராட்டத்தில் இணைந்திருந்தனர்.
இதனிடையே நாளை சனிக்கிழமை வவுனியா நகரில் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு யாழிலிருந்து வாகனத்தொடரணியாக பேரணியொன்றை நடாத்தி தமது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.

Post a Comment