விடுவிக்க கோரி உண்ணாவிரதம்!
பிணை அனுமதி இலங்கை காவல்துறையின் எதிர்ப்பினால் மறுக்கப்பட்டுள்ள நிலையில் வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று செவ்வாய்க்கிழமை (12) உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதனையடுத்து அவர்கள் வவுனியா சிறைச்சாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) மீள அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் தங்களை விடுதலைசெய்யகோரி அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
முன்னதாக நீதிமன்றிற்கு கொண்டுசெல்லப்படும் போதே அவர்கள் உணவினை எடுத்திருக்கவில்லையென தெரியவருகின்றது.இந்நிலையில் இன்று புதன்கிழமையும் அவர்கள் உணவினை உட்கொள்வதற்கு மறுத்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட எட்டுபேரில் ஆலயபூசாரியார் த.மதிமுகராசா, து.தமிழ்ச்செல்வன், தி.கிந்துயன்,சு.தவபாலசிங்கம், விநாயகமூர்த்தி ஆகிய ஜவரே உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதனிடையே வெடுக்குநாறிமலை கைதுகள் தொடர்பில் பூரண விசாரணைகளினை ஜனாதிபதியிடம் கோரியிருப்பதாக அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Post a Comment